Search
Close this search box.

தைவானுக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

தைவானுக்கு (Taiwan) ரூபாய் 3,000 கோடி மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தளபாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா (America) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாகக் கருதிவரும் சீனாவிற்கும் (China) மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே இந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், குறித்த முடிவை தைவான் அதிபர் லாய் சிங் டே (Lai Ching Te) வரவேற்றுள்ளதுடன் இராணுவ தளபாட கொள்முதல் மூலமும் மற்றும் தங்கள் சொந்த முயற்சி மூலமும் தைவானின் இராணுவ வலிமையை தொடர்ந்து மேம்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆயுத விற்பனையால் பிராந்தியத்தில் இராணுவச் சமநிலை பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நில அதிர்வு ஏன் ஏற்பட்டது?: புவியியல் பேராசிரியர் சேனாரத்ன விளக்கம்!

இலங்கையை அண்மித்துள்ள ஆழமான பிளவுப் பகுதிகளில் இருந்து வெளியேறும் சக்தியினால் வவுனியா பிரதேச மக்கள் உணரும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். வவுனியா, மதவாச்சி பிரதேச மக்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான அதிர்வை உணர்ந்துள்ளதாகவும், இன்னும் பல வருடங்களுக்கு அந்த பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பூமியானது வருடாந்தம் சுமார் இரண்டு மில்லிமீற்றர் அளவு உயரும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் புவித்தட்டுக்களில் அழுத்தங்கள் வெளியேறுவது வழமையாகக் காணப்படுவதாகக் கூறிய கலாநிதி குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவில் உருவாகி வரும் புதிய தட்டு எல்லையில் இந்த அதிர்வுகள் ஏற்படாததால், இது இலங்கைக்கே உரிய தனிச்சிறப்பு என்பதை தெளிவாகக் கூற முடியும் என்றும் அவர் கூறினார். வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணத்தில் சில இடங்களில் இந்த நில அதிர்வு நிலை உணரப்பட்டுள்ளதாகவும், பெரிய பாறை அடுக்குகளில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த அதிர்வுகளை அதிகளவில் உணர முடிவதாகவும் சேனாரத்ன கூறினார். பூமியின் உட்பகுதியில் அதிர்வு வெளியேறும் போது வெளிப்படும் ஆற்றலை மண் உறிஞ்சுவதால், மண் அடுக்கு அதிக அடர்த்தி உள்ள பகுதிகள் அதன் விளைவை குறைவாக உணரும் என்றும் அவர் கூறினார். ரிக்டர் அளவுகோலில் இரண்டாக பதிவான இந்த நிலநடுக்கங்களால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

வானில் மிதக்கும் மர்மப்பொருட்கள்: இலங்கைத்தீவில் மற்றுமொரு சுனாமி?

வடமாகாணம் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (18) திடீர் நிலஅதிர்வு பதிவானதையடுத்து அன்றைய தினம் முதல் வானில் இரண்டு மர்மப்பொருட்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நீல நிறத்தில் இருக்கும் இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானத்தில் மெதுவாக மிதந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நில அதிர்வின் பின்னரே இந்த மர்மபொருட்கள் வானில் தோன்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வானத்தில் மெதுவாக மிதக்கும் அந்த இரண்டு பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்படுவதாக தெரிவித்த மீனவர்கள் கடலிலிருந்து பார்க்கும் பொழுது அவை நன்றாக காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கைத்தீவில் சுனாமி ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற பல மர்ம பொருட்கள் வானில் மிதந்ததாகவும் அவை சுனாமியின் பின்னர் காணாமற் போனதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த அறிக்கையின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் பிரிவுக்கும் இதே தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கான விபரங்கள் கொழும்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றதுடன் இன்று அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தேர் திருவிழா இடம்பெறுகின்றது 15 நாட்களுடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் இன்று தேர் திருவிழா நடைபெற்று நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளது இதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பேருந்து சேவைகளும் குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகளும் இடம்பெறுகின்றது அத்துடன் அமுதசுரபி அன்னதான மடத்தில் பக்கதர்களுக்கு அன்னதானம் இடம்பெறுவதுடன் ஆலய சூழல்களில் பக்தர்களின் நலன் கருதி அம்புலன்ஸ் ,சென்சிலுவை சங்கம் மக்கள் நலன்புரி சங்கம் உள்ளிட்டவற்றின் தொண்டர்களும் சேவைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பம்: இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கை சமர்பிப்பு

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் அனைவரின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடக்கில் உயர்பாதுகாப்பு பகுதியில் காணி விடுவிப்புக்கு குறித்த நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், கிழக்கில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளன. மேலும், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கப்படுவது குறித்து மேலும் கவலை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேகமாக பரவும் கொடிய பக்டீரியா; இலங்கையில் முடங்குமா விமான சேவைகள்..?

கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு செவிசாய்த்ததன் காரணமாகவே  நாட்டில் கொவிட் தொற்று அனர்த்தமாக பரவியதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார். ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவில் பரவி வரும் உடலை அரிக்கும் கொடிய பாக்டீரியாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளான விமான நிலையம் மற்றும் துறைமுக நுழைவாயில்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறும், சில அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதிப்பதற்கு தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த கொடிய பக்டீரியா இலங்கைக்கு வருமாயின் அரசாங்கம் நிபந்தனையின்றி சுகாதார துறைக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க வேண்டும் எனவும் மருந்துகள் தேவைப்படின் அவசர கொள்வனவு முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், இதுவரை எமது நாட்டில் இந்த பக்டீரியா தொற்றினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வீதி ஆலோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் வைத்தியர் சமில் விஜேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழுதைப் பாலில் சீஸ் இலங்கையில் புதிய முயற்சி

கழுதைப்பாலில் இருந்து சீஸ் உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கிளியோபாட்ரா போன்ற அழகிகள் தங்கள் அழகை மேம்படுத்த கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த பாலை அடிப்படையாகக் கொண்டு வாதநோய்களை தடுக்கும் தைலங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவ பீடத்தை தொடர்பு கொண்டு ஆராய திட்டமிட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அசோக தங்கொல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கழுதைப்பாலின் ஊட்டச்சத்து தாய்ப்பாலைப் போன்றே உள்ளது, அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டிக்கு உலகில் அதிக தேவை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட நன்கு வளர்ந்த கழுதை ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ புல் சாப்பிடுவதாகவும், அவற்றிலிருந்து தினசரி பெறக்கூடிய பாலின் அளவு ஒரு மாட்டிடமிருந்து பெறப்பட்டும் பாலின் அளவைவிட மிகக் குறைவு என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார். கழுதைப்பாலை அடிப்படையாக கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்த தொன்மையான கழுதைகளை பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் தேவை என விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், சில பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளில் கழுதைகள் அழிந்துவிடும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

ரணிலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கருணா…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பாணந்துறை தல்பிட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். கடந்த காலம் அனைவருக்கும் தெரியும். முன்னாள் ஜனாதிபதி அனைத்து துறைகளையும் அழித்தார். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னரே நாம் நல்லதொரு நிலையை அடைந்துள்ளோம். குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.அதனால்தான் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க அனைத்து மக்களும் தயாராக உள்ளனர். அதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எமது கட்சி ஆதரவளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை

யாழ்ப்பாணம்(Jaffna) நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது நெடுந்தீவு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் (வயது 23) என்பவரே அடி காயங்களுடன் குறித்த பகுதியில் சடலமாக இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.