இலங்கையில் பெண்கள் மத்தியில் பரவும் நோய் – எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவர்கள்
எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா இது தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளார். நெற் பயிர்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் சுரங்கம் தோண்டுதல் போன்ற அதிக ஆபத்துள்ள தொழில்களில் ஈடுபடும் ஆண்கள் மத்தியிலேயே இந்த நோயின் தாக்கம் முன்பு இருந்து வந்தது எனினும் பல ஆண்டுகளாக, பெண்கள் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 9,000 நோய்த்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டில் இதுவரை 5,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் போன்ற பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், கடுமையான மழையைத் தொடர்ந்து தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கிறது இந்த நோய் தசை வலி, மஞ்சள் காமாலை, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. இறுதியாக, கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம், இதயம் அல்லது சுவாச செயலிழப்புக்கு இந்த நோய் வழிவகுக்கும் என்றும் தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா தெரிவித்துள்ளார்.
மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல் : வெளியேறிச் செல்லும் சிரேஷ்ட அரசியல்வாதிகள்
எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முதலில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவும், மாற்றுக் குழுக்களும் இணைந்துள்ளனர். பொதுஜன பெரமுனவுடன் எந்தவிதமான கூட்டணியையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்கள் ஜனாதிபதி முன்னிலையில் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஜனாதிபதியுடன் பயணம் ஒன்று இல்லை எனவும், பொதுஜன பெரமுன கொள்கைகளுக்கு எதிரான குழு ஒன்றே அவருடன் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். நாமலின் ஆட்சேபனை ஒருபுறம் வைத்துவிட்டு அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு உதவும் போது இவ்வாறு கருத்து வெளியிட்டால் மன முறிவுகள் மாத்திரமே ஏற்படும் என பசிலுடன் விவாதத்திற்கு வந்த வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களை ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும் என மாற்றுக் குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சிக்கான ஆதரவு குறையவில்லை! சாந்த பண்டார தெரிவிப்பு
மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 69 இலட்ச மக்களை தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்ள எவராலும் முடியாது. அவ்வாறு நினைத்திருந்தால் அவர்களுக்கு அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அந்த மக்களுக்கு உரிமை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். கட்சிக்கான ஆதரவு குறிப்பிட்டளவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியினர் வேறு ஓர் தரப்பில் இணைந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 நேற்று ஆரம்பமானது. இந்த கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொசன் யாத்திரீகர்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்..!
பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று (20) முதல் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என். ஜே. இதிபொலகே குறிப்பிட்டார். அநுராதபுரத்திற்கு வரும் மக்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார். இதேவேளை, இந்த ஆண்டு பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இதேவேளை, அநுராதபுரம் நகரை மாசுபடுத்தாமல் யாத்திரையை மேற்கொள்ளுமாறு அதமஸ்தானத்தின் தலைவர் பல்லேகம ஹேமரதன, அநுராதபுரத்திற்கு வழிபட வரும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் நிமல்..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இந்த நாட்களில் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட விசாரணை பணியகம் தனது விசாரணை நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள பணியகத்தின் பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, ஹாலியெல்ல, இரத்தினபுரி, தங்காலை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாகாண அலுவலகங்களிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இதன்படி 2024 ஜனவரி முதல் 2024 ஜூன் 18 வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 2155 முறைப்பாடுகள் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளதுடன், அவற்றில் 1051 முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சோதனையிட விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 65 மோசடியாளர்களும் இந்த காலப்பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்கள் 8 பேர் உள்ளடங்குகின்றனர். 2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ.65,103,626.00 தொகையை பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் மீட்டெடுக்க முடிந்தது. வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு ஏஜென்சிக்கு செல்லுபடியாகும் உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் தொடர்புடைய வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பில் 1989 ஹாட்லைனைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது அழைப்பதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு பணியகம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களை வலியுறுத்தியுள்ளது. அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வு திணைக்களத்திற்கு 011 2864241 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.
மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கை
மதுபான விற்பனை நிலைய உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால் சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் என தெரிவித்துள்னர். இதனால் சமூக கிளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னதாக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமம் வழங்குவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கியுள்ள பாரியளவான சமூக சீரழிவு நிலைமையாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றுக்கு அடிமையாவதனை குறிப்பிட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான பின்னணியில் சுயநலவாத பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமங்களை வழங்குவதனை மாநாயக்க தேரர்கள் என்ற ரீதியில் எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.