முள்ளிவாய்க்காலில்கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல்
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எலிக்காய்ச்சல் நோய் காரணமாக 110 பேர் பாதிப்பு!
யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ். மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்று (17) வரை ஏறத்தாழ 7200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளது. இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துச்செல்லவுள்ளது என தெரிவித்தார்.
வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்!!
வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60 வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர். அண்மைக்காலமாக வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் தொகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்த நபர் சடலமாக மீட்பு!
வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. வெள்ளிக்கிழமை (6) மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொருநபர் சம்பவம் தொடர்பாக ஊர்மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து குறித்த நபரை தேடும்பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது. நீண்டநேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சிலமணி நேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது. சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
கிளிநொச்சியில் குடும்பப் பெண் உயிரிழப்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது போதையில் இருந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி!
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே தலைமறைவாக இருந்த போது சந்தேகநபர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி ; தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்த தாய்.
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ். தெல்லிப்பளை புற்றுநோயாளர் சிகிச்சை சர்ச்சையின் உண்மைத்தகவல்கள்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் விவகாரத்துடன், கொதிப்படைந்த சில சமூக ஊடக பயனர்கள் சகட்டுமேனிக்கு வைத்தியத்துறையை விளாசி வருகிறார்கள். இந்த விளாசலில் உண்மைக்கும், ஆதாரங்களுங்களும் இடமில்லாமல் போய்விட்டது. இவ்வாறு, சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்ட விவகாரமே- வைத்தியர் நடராசா ஜெயக்குமாரனின் குற்றச்சாட்டு விவகாரம். யாழ்ப்பாணம், தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மீது, வைத்தியர் ஜெயக்குமாரன் குற்றம்சாட்டிய கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. பின்னர் அது சமூக ஊடக பயனர்கள் பலரால் பிரதியெடுக்கப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டு கடிதத்தின் பின்னணி, அதன் பின்னாலுள்ள மருத்துவ விவகாரங்கள் பற்றியெல்லாம் யாரும் ஆராயவில்லை. “பச்சை சட்டை போட்டால் அடிப்போம்“ பாணியில், மருத்துவர்கள் மீது யார் குற்றம்சாட்டினாலும், கண்ணை மூடிக்கொண்டு அதை நம்பி பகிர்வோம் என்ற மனநிலையுடன் பெரும்பாலானவர்கள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. வைத்தியர் ஜெயக்குமாரனின் குற்றச்சாட்டு பின்னணியை ஆராய்ந்த போது கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம். யாழ்ப்பாணத்தில் இப்போது புற்றுநோய் சிகிச்சை சிறப்பான நிலையில் உள்ளது. தெல்லிப்பளையில் உள்ள புற்றுநோயாளர் சிகிச்சை நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். பணவசதியுள்ள சிலர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்றாலும், வடக்கிலுள்ள பெரும்பாலான புற்றுநோயாளர்களுக்கு ஆதாரமாக தெல்லிப்பளை புற்றுநோயாளர் சிகிச்சை நிலையமே உள்ளது. இதற்கு காரணமான வைத்தியர்கள் இருவர். முதலாமவர்- வைத்தியர் ஜெயக்குமாரன்.. இரண்டாமவர் வைத்தியர் கிருசாந்தி. இருவருமே அர்ப்பணிப்பாக செயற்பட்டதாலேயே தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வளர்ச்சியடைந்துள்ளது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் வளர்ச்சியில் இருவரின் பங்கும் தவிர்க்க முடியாதது என்பதே உண்மை. ஆனால் சிக்கல் என்னவெனில்- கிட்டத்தட்ட ஒரே தகுதி நிலையுடைய இருவருமே ஒருவித ஈகோ சிக்கலில் சிக்கியுள்ளதே பிரச்சினையின் மூல காரணமென்கிறார்கள் மருத்துவத்துறையினர். அண்மையில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஜெயக்குமாரன் வழங்கிய செவ்வியை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது- ஜெயக்குமாரனின் வீட்டை எரித்து, உடைத்து அவரை வடக்கிலிருந்து விரட்டியதாகவும், அந்த சம்பவத்தின் பின்னணியில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியே இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் தவறன தகவல். சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமையேற்கு முன்னரே, ஜெயக்குமாரன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதற்கு ஒரே காரணமாக அமைந்த சம்பவம்- அப்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த பவானி. பவானி பணிப்பாளராக இருந்த சமயத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் இந்த மோசடி நடந்ததாகவும் பகிரங்கமாக செய்திகள் வெளியாகியிருந்தன. அப்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டவர் ஜெயக்குமாரன். அப்போது, யாழ்ப்பாணத்தில் கோலோச்சிய அரச ஆதரவு ஆயுத இயக்கமொன்றின் தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானியை தீவிரமாக ஆதரித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னள் பதில் அத்தியட்சகர் விவகாரத்திலும் இதே விதமான அணுகுமுறை தென்பட்டது. இதனால், அந்த ஆயுத இயக்கத்தின் தலைவருடனும், வைத்தியர் ஜெயக்குமாரன் முரண்பட்டிருந்தார். இதன்பின்னர், 2012ஆம் ஆண்டு வைத்தியர் ஜெயக்குமாரன் வீட்டின் மீது கழிவு ஓயில் வீசப்பட்டு தாக்கப்பட்டது. இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவில்லை. வைத்தியசாலையின் ஊழல் தரப்பு அல்லது ஆயுத இயக்க தரப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாமென அப்போது கருதப்பட்டது. இதுதான், வைத்தியர் ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய கதை. ஜெயக்குமாரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர். பலமான தொழிற்சங்க தலைவராக இருந்த வேறு யாரேனும் இப்படியொரு முடிவை எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனினும், உயிராபத்து என அவர் வெளியேறிய முடிவை யாரும் குறைமதிப்பிற்குட்படுத்த முடியாது. வைத்தியர் கிருசாந்தி, வைத்தியர் ஜெயக்குமாரன் விவகாரத்தில் யார் சரி, யார் தவறு என்பதை தீர்மானிப்பது சிரமம். வைத்தியர் கிருசாந்தி உள்ளிட்ட தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளிக்கிறார்கள். வைத்தியர் ஜெயக்குமாரனும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கிறார். அவர் தனியார் வைத்தியசாலையிலும், மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சையளித்தவர்களையும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததே சர்ச்சையாகியுள்ளது. இவர்கள் அனைவருமே தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளித்து, சிகிச்சைக்கு அரச வைத்தியசாலைகளையும் பயன்படுத்தியுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை தெல்லிப்பளைக்கு அழைத்துச் சென்று, மனம் வெறுத்து, மகரகமவிற்கு அழைத்து சென்ற ஒருவர் தமிழ் பக்கத்துடன் பேசிய போது, தனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும், தனது நண்பருக்கு அறிமுகமான தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை, நண்பர் மூலமாக தொடர்பு கொண்ட போது, எம்மை யாழிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்ததாக தெரிவித்தர். தனியார் வைத்தியசாலையில் ஒரு நோயாளிக்கு ஆரம்ப சிகிச்சையளித்து விட்டு, அவரை அரச வைத்தியசாலைக்கு பரிந்துரைத்து ஒரு வைத்தியர் அனுப்பினால் விவகாரம் சிக்கலானதே. ஜெயக்குமாரன் விவகாரத்தில் இதுதான் நடந்தது. ஆனால், அரச வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர், மற்றொரு அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதை வைத்தியர்களே எதிர்ப்பது அநீதியானது. ஆனால், உயிராபத்தான புற்றுநோய் போன்ற சிகிச்சைகளில், நோயாளிகள் மாற்றப்படும் போது, அவரது சிகிச்சை விபரங்களை முறையாக அனுப்ப வேண்டும். அந்த விபரங்களில் சிக்கல் இருந்ததாக தெல்லிப்பளை வைத்தியர்கள் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவம் ஜெயக்குமாரன் அதை மறுக்கிறார். இப்படியான சமயத்தில், இரு தரப்பையும் இணைத்து பேசி சிக்கலை தீர்ப்பதே முறையான நடவடிக்கை. அதுதான் நடந்தது. தனக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணி இதுதான். இரு தரப்பையும் இணைத்து பேசி, சிக்கலில்லாத சிகிச்சை பொறிமுறையை உருவாக்க வேண்டுமென்றுதான் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு பார்வையும் உள்ளது. ஜெயக்குமாரன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளித்த நோயாளியை தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெல்லிப்பளை வைத்தியர்களும், யாழில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பவர்கள்தான். யாழில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கும் தமது நோயார்களை, அங்கு இல்லாத வளங்களை பயன்படுத்த, தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு அழைத்து வருகிறார்கள். வைத்தியர் ஜெயக்குமாரனின் பேட்டி ஒளிபரப்பான சமயத்தில், அந்த நிகழ்ச்சியில் தொலைபேசி வழியாக உரையாடிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் தேவநேசன், தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளர்களுடன் சுமுகமாக நடப்பதில்லையென்ற முறைப்பாடு தன்னிடம் வரவில்லையென தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவ்வாறான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது. இந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் விளக்கம் கோரும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலை வைத்தியர்கள், நோயாளர்களை அணுகும் விதத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக, அங்கு மருத்துவ மாபியா கடைவிரித்து உட்கார்ந்துள்ளது என்பது பொருளல்ல. பிற தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையளித்து விட்டு தெல்லிப்பளைக்கு பரிந்துரைப்பதே மாபியாவின் கூறு- அதை வைத்தியர் ஜெயக்குமாரன் செய்திருப்பினும் தவிர்க்கப்பட வேண்டியதே. தெல்லிப்பளை வைத்தியசாலையில் அது நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதே. வைத்தியர் ஜெயக்குமாரனும், தற்போது தெல்லிப்பளையிலுள்ள வைத்தியர்களும்- இந்த சமூகத்திலுள்ள புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையானவர்களே. வைத்தியத்துறை மீதான மக்களின் கோபங்களை, வைத்தியத்துறை அமைப்பின் மீதான கோபமாக மாற்றும் முயற்சிகள் தற்போது நூதனமாக நடந்து வருவதை பலரும் அறியவில்லை. இது ஆபத்தானது. தற்போது மருத்துவ மாபியா பற்றி பரவலாக பேசும் யாரும், யாழிலுள்ள நெதேர்ன் சென்ரல் வைத்தியசாலை பற்றியோ, பிற தனியார் வைத்தியசாலைகள் பற்றியோ பேசவில்லை. அண்மையில் நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒரு ஸ்கானரை வைத்து, யாழிலுள்ள வைத்தியர்களை அழைத்து கருத்தமர்வு நடந்தது. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவைதான் மருத்துவ மாபியா. யாழில் கருவுறு சிகிச்சை ஒரு பெரும் மாபியாவாக வளர்ந்து வருகிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இரண்டு வைத்தியர்கள் தொடர்பான ஈகோ போட்டியை நாம் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது, வைத்தியத்துறை மாபியாவை தப்ப வைப்பதுடன், சிஸ்டம் மீதான அவநம்பிக்கையை உருவாக்கி, தனியார் வைத்தியசாலைகளை நோக்கி மக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியுமாகும்.
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : முக்கிய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை இம் மாதம் 7ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த களவிஜயத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 30.07.2024 அன்று நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் 01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு 02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு 03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம் 04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம் 05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம் 06.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை
தமிழர் பகுதியில் இரவு விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்!
வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த கைது நடவடிக்கை (19-07-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.