மூதூர் விபத்து – காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு: 64 பேர் வைத்தியசாலையில்
மூதூரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து மூதூர் – கெங்கே பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்த பயணிகள், சாரதி உட்பட 51 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்கள் குழுவொன்றை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவர் கைது
திருகோணமலை (Trincomalee) – சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் ஆறாம்வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை, நேற்று (18.07.2024) சம்பூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 பியர் ரின்களும், இரண்டு சாராய போத்தல்களும் ஒரு கசிப்பு போத்தலும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அந்த பெண் சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அனுமதி இல்லாத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை போன்ற இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
100 ரூபாவுக்காக தந்தை செய்த கொடூரச்செயல்!
தனது மகன் நூறு ரூபாய் பணத்தைத் திருடினான் என்ற குற்றத்திற்காகத் தந்தையால் மகனுக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தந்தையைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை,மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயைத் திருடிச் செலவழித்தான் என்ற குற்றத்திற்காகவே தந்தையால் நேற்று முன் தினம்(15) இக்கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, தனது சட்டைப் பையில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த கோபமுற்ற தந்தை மகனுக்குச் சூடு வைத்துள்ளார். அடுத்த நாள் பாடசாலைக்குச் செல்ல முடியாதென்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறியதையடுத்து பாடசாலைக்குச் செல்லா விட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான். நேற்று(16) பாடசாலை சென்ற மாணவன் வகுப்பறையில் சோகமாக இருந்ததை அவதானித்த வகுப்பாசிரியர், மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தைத் தெரிவித்துள்ளான். விடயத்தை அறிந்த பாடசாலை நிர்வாகம், வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச்சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவனின் தந்தையைக் கைது செய்த காவல்துறையினர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவம்: இராணுவத்தினர் விசேட விசாரணை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இராணுவத்தினரும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.
திருகோணமலையில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும் கடத்திச் சென்று அவரை கொலை செய்ததுடன், அதே வாகனத்தில் ஏற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்செயல் தொடர்பில் நேற்று முன்தினம் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருகோணமலை அலஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலஸ்வத்த பிரதேசத்தில் கடையொன்றை நடாத்திவந்த குறித்த நபர், அங்கு தங்கியிருந்த போது சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை தாக்கி கெப் வண்டியுடன் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வர்த்தகரை கொலை செய்த பின்னர், மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் சடலத்தை கெப் வண்டியில் வைத்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடக்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் இன்று விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகளும் 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டடிபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி இன்று இடம்பெற்றது. வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை இன்று மேற்கொண்டனர். இதன் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிசார் பொறுப் பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
போதைபொருளுடன் உத்தியோகத்தர் கைது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் திங்கட்கிழமை (01) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் சம்பந்தனுக்கு அஞ்சலி
மறைந்த தமிழ் தேசிய தலைமகனாக போற்றப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு (R.Sampanthan) அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (01) தமிழரசுக்கட்சின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் அஞ்சலி பதாகையும் கட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பதிவு தொடர்பில் வெளியான தகவல்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 சதவீதமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிந்து கொள்வதில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி பி. சத்தியபவான் தெரிவித்தார். மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (30.06.2024) மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் சமாதான செயற்பாட்டாளர்கள், மதப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்நிகழ்வில் தேர்தல் கால செயற்பாடுகள் சம்பந்தமாக தொடர்ந்து தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி சத்தியபவான், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 10 சதவீதமான வாக்காளர்கள் தங்களைப் பதிந்து கொள்ளாத நிலைமைகள் காணப்படுகின்றன. கவனயீனம், தவறு அல்லது குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்று விடுகின்றது. எனவே, இந்த விடயத்தில் மக்களுக்காக மக்களோடு சேர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் மாவட்ட சர்வமத செயற்குழு போன்ற அமைப்புக்கள் இது விடயமாக மக்களுக்கு தெளிவான விளக்கங்களைக் வழங்குவதன் மூலம் இனிவரும் காலங்களில் விடுபட்டுப்போன குடியிருப்பாளர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.” என்றார். இதன்போது மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர். இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ரேவதன், விளையாட்டு உத்தியோகத்தரும் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான கே. சங்கீதா, கூட்டுறவுத் திணைக்கள கணக்குப் பரிசோதகர் எம்.ஐ.எம். உசனார், தொழுநோய் சம்பந்தமான கிழக்கு மாகாண சமூகப் பணி வளவாளரும் இணைப்பாளருமான அருட்பணி ஏ.எஸ். ரூபன் உட்பட இன்னும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
திருகோணமலையில் வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது.
திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பஸ்ஸர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36 முதல் 50 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.