Search
Close this search box.
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பம்: இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கை சமர்பிப்பு

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் அனைவரின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் உயர்பாதுகாப்பு பகுதியில் காணி விடுவிப்புக்கு குறித்த நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், கிழக்கில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளன.

மேலும், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கப்படுவது குறித்து மேலும் கவலை தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News