Search
Close this search box.

இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம்..! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே இருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெற்றதால் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பிக்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பிக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19.06.2024) இடம்பெற்ற அமர்விலேயே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கருத்துரைத்த பிரதமர், “இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னுடன் கலந்துரையாடினார்கள். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் தொடர்பிலான பிரச்சினை சம்பந்தமாக அவர் நடவடிக்கை மேற்கொள்வார். அது மாத்திரமன்றி, இந்த விடயம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, விரைவில் கல்முனைக்கு சென்று கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் (Shanakiyan), “கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் வலியுறுத்தியும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கவனம் செலுத்தவில்லை. எனவே, பிரதமர் இது குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். அதேவேளை, வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் (Selvarajah Kajendren) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் விரைவில் தீர்வை பெற்று தருமாறு பிரதமரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மர்மத்தூண்கள்

அமெரிக்காவின்(USA) லாஸ் வேகாஸில்(Las Vegas) மர்மமான முறையில் ஒற்றைக்கல் தூண் ஒன்று காணப்பட்டமையானது அங்குள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த தூணை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக லாஸ் வேகாஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மர்மத்தூணானது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் தகவல் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்கள் சமூக ஊடகப்பயனர்கள் இந்த மர்மத்திற்கு விளக்கம் காண வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளனர். 2020 நவம்பர் மாதம் 12 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று உட்டாவில் உள்ள பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து உலகின் பல பகுதிகளில் இதுபோன்ற மர்மத்தூண் திடீரென்று காணப்பட்டு வருகிறது. இந்த விடயத்துடன் தொடர்புடைய தொடர்புடைய பகுதியானது மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால், காவல்துறையினர் பொதுமக்கள் நலன் கருதி அந்த மர்மத்தூண் காணப்பட்ட பகுதியை வெளியிட மறுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ருமேனியா(Romania), மத்திய கலிபோர்னியா(California) ஆகிய பகுதிகளிலும் மர்மத்தூண் திடீரென்று தோன்றியது. தற்போது லாஸ் வேகாஸ் பாலைவனம் அருகே தோன்றியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று தென்கிழக்கு வேல்ஸில் ஒரு மலைப்பகுதியில் தோன்றியமையும் குறிப்பிடத்தக்கது.

13 ஆம் திருத்த சட்ட விவகாரம்: சிறீதரனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு எதிராக, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாராதன தேரர் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். 13 ஆம் திருத்த சட்டம் மூலம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாடாளுமன்றில் சிறீதரன் உரையாற்றியமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் செயற்பாடு என்பதை வலியுறுத்தியே இந்த முறைபாட்டை பதிவுசெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு பாதுகாப்பை இல்லாது செய்யும் ஒரு செயற்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதாகவும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் நாடாளுமன்றில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது இலங்கையின் சட்டத்திற்கு முரணானது. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் முதலில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து நாடாளுமன்றில் சென்று நேரடியாக கருத்துக்களை முன்வைக்கின்றார். சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுகின்றார். மேலும், வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோருகிறார். இவை அனைத்துமே நாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான விடயங்களை எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கவில்லை. இதன் காரணமாகவே இந்த முறைபாட்டை பதிவு செய்துள்ளேன் என்றார்.

குருந்தூர் மலையை நோக்கி நகரும் பிக்குகள்: தமிழர் பகுதிக்குள் பலத்த பாதுகாப்பு

முல்லைத்தீவு – குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார் , விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பிக்குகள் குழு பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி தொடக்கம் மகியங்கனையிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த பிக்குகள் குழு இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து முல்லைத்தீவு குருந்தூர் மலையை செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக அளம்பில் சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன் வீதி தடுப்புக்கள் வைத்திருப்பதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இந்த பாதுகாப்பு கடமைக்கு மத்தியில் பொலிசாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியோர் பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த மக்கள் பௌத்த கொடியினை வீதியில் இரு பகுதிகளிலும் நாட்டி கூடாரங்களையும் அமைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 161 நோயாளர்கள் பதிவு – அதிர்ச்சி தகவல்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 20 நாட்களில் 2,044 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, மே மாதத்தில் 2,647 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 26,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில், அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இவ் வருடத்தில் டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கைக்கு உதவியளிக்க சீனா எப்போதும் தயார்

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் உதவுவதைப் போன்று கடன் விடயத்திலும் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான்( Lin Jian) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பேச்சாளர்  சீனாவின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது அத்துடன் இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்க தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற சீனா தயாராகவே உள்ளது என்றும் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களுடன் சிக்கிய நபர்..!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்  மீட்கப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும், சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மத்திய மாகாணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த 4 மாதங்களாக வாடகை பணத்தை செலுத்தவில்லை என மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அவருடைய மாதாந்த சம்பளத்தில் 10 வீத அடிப்படையில் குறித்த வீட்டிற்கு வாடகை செலுத்திவந்திருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்ட நாள்முதல் வாடகை பணம் செலுத்த தவறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பணத்தை செலுத்த 19 நாட்கள் கடந்துள்ள நிலையில், முன்னறிவித்தல் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அரகலய போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் கெஹலியவின் வீடு எரித்து நாசமாக்கப்பட்டது. இதனையடுத்து கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மலபார் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சுகாதார அமைச்சராகவும், சுற்றாடல் அமைச்சராகவும் இருந்த காலத்தில் தனது மாதாந்த சம்பள பணத்தில் 10 விதத்தை வாடகை பணமாக பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை அடிப்படையில் குறித்த இல்லம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பணம் செலுத்தப்பட்டிருந்தாலும் தற்போது குறித்த பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளதாக துறைசார் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் லங்காதீப(Lankadeepa) பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ளார். மேலும், கடந்த பெப்ரவரி மாதம் முதல் கெஹலிய ரம்புக்வெல்ல சிறையில் இருக்கும் நிலையில், நாடாளுமன்ற செயலாளரிடம் குறித்த பணத்தை பெற்றுக்கொடுக்குமாறு எழுத்து மூலம் கெஹலிய கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த வாடகை பணத்தை மீட்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்து கடிதமொன்றை வங்கினால் அந்த பணத்தை வசூலிக்கும் அதிகாரம் நாடாளுமன்ற செயலாளருக்கு உண்டு என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு, தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சருக்கு 10 வீத சம்பளத்தை பிடிக்கச் செய்ய சம்மதம் கோரி மத்திய மாகாண முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அனுராதபுரத்தில் சிக்கிய மர்மம் – அணைக்குள் புதைந்திருந்த ரகசியம்

அனுராதபுரம் கலாவெவ அணையை உடைத்து புதையல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அழைப்பாளர் நாமல் கருணாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பொறுப்பான அதிகாரிகளின் கண்களில் படாத வகையில் இந்த அகழ்வுகள் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். கலாவெவ பிரதான அணைக்கட்டு புனரமைப்பதற்காக அகழ்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் வினவிய போது தமக்கு எனவும் தெரியாது எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அங்கிருந்த மிகவும் பெறுமதியான புதையல்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.