Search
Close this search box.

லயன்களைக் கிராமங்களாக்கும் திட்டத்துக்கு திகாம்பரம் எம்.பி எதிர்ப்பு..!

மலையக பகுதியில் தற்போது இருக்கின்ற லயன்களை கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்ற நிலையில் இதற்கு  நாம் உடன்பட முடியாது என்பதுடன் மக்களும் உடன்படமாட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட குடியிருப்பு பகுதியைக் கிராமங்களாக அறிவிக்கும் திட்டம் பற்றியே பேச்சு நடத்த வந்திருந்தோம். நல்லாட்சியின் போது நான் அமைச்சராக இருந்தேன். தனி வீடுகள் அமைக்கப்பட்டே காணி உரித்துடன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இவர்கள் லயன்களைக் கிராமங்களாக்கப் பார்க்கின்றனர். இதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவாகக் குறிப்பிட்டோம். எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டு, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டே கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். காணி உரிமைக்கான எமது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்தான் இருக்கின்றோம். ஜனாதிபதியுடனான சந்திப்பில் தேர்தல் பற்றி பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

நுவரெலியாவில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து; 30ற்கும் மேற்பட்டோர் காயம் .

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, விபத்தில் சிக்கி 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இ.தொ.காங்கிரஸ் இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்..

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், “1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் தமக்கு அது பற்றி பிரச்சனை இல்லை எனவும் ஆனால், மக்களுக்கு கட்டாயம் ஒற்றுமையாக, உறுதுணையாக நின்றாக வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். இந்த 1700 ரூபாய்  சம்பளத்தை பொறுத்தவரைக்கும், கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால் இதில் இருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், இன்றைக்கு இளைஞர்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பெருந்தோட்ட சமூகத்தினரை பற்றி அறியாத நபர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள் இன்றைக்கு இந்த 1700 ரூபாய் சம்பளமானது மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வராது என்று. ஆனால், நிறைய பேருக்கு புரியாத விடயம் கொரோனாவுக்கு முன்னால் வறுமையின் விழுக்காற்றானது பெருந்தோட்ட சமூகத்துக்கு மத்தியில் 23% சதவீதமாக இருந்தது, இன்றைக்கு அது 52% சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு குழந்தைகளை படிக்க வைக்கின்றார்கள். சுமார் 1 இலட்சம் மக்கள் இருக்கின்றார்கள் இந்த தோட்ட தொழிலை நம்பி, அந்த ஒரு இலட்சம் மக்களை நம்பி கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இதனை பலமாக எதிர்த்து ஒரு தவறான திரையை முன்னாள் கொண்டு வந்த இருக்கின்றார்கள். அதற்கு நாங்கள் கட்டாயம் பாடம் கற்பித்துகொடுப்போம். நான் மக்களுக்கு, அவர்களின் நம்பிக்கையை தளர விட வேண்டாம் என்று ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் சொன்னதை கட்டாயம் செய்வோம். இன்றைக்கு அரசாங்கமாக இருக்கட்டும், தொழிற்சங்கங்களாக இருக்கட்டும் அனைவருமே முழு முயற்சியுடன் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். மக்களும் இதற்கு ஆதரவு அளிக்கிறார்கள். 1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள்.  அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் எனக்கு அது பற்றி பிரச்சனை இல்லை, தயவுசெய்து பெயர் போட்டுக்கலாம். ஆனால், மக்களுக்கு கட்டாயம் ஒற்றுமையாக, உறுதுணையாக நின்றாக வேண்டும். அப்பொழுதுதான் இது சாத்தியமாகும். இதில் வந்து அரசியல் விளையாடுவது ஒரு மிகப்பெரிய தவறு. அதே நேரத்தில், இந்த நீதிமன்ற உத்தரவு வரும்போது சில தொழிற்சங்க தலைவர்களும், அரசியல் தலைவர்களும் சந்தோஷப்பட்டார்கள். இந்த மாதிரி நாங்கள் இருந்தால் நமக்குள்ளே பிரிவினை இருந்தால் இந்த மக்களை முன்னால் கொண்டு போக முடியாது. என்னை பொறுத்த வரைக்கும், நான் இந்த நாள் கூலி சம்பளம் முறைமையை எதிர்க்கின்றேன். ஒரு மாற்று முறைமை தேவை. ஆனால், அந்த மாற்று முறைமை வரும் வரைக்கும் ஒரு நியாயமான சம்பளம், வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளம் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும் இன்றில் இருந்து மக்கள் அவர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிக்காட்டுவார்கள். அதாவது ஒவ்வொரு தோட்டத்திலும் வெளிக்காட்டுவார்கள். அவர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என அமைச்சர்  ஜீவன் தொண்டமான் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கண்டியில் பாரிய தீ விபத்து: மூடப்பட்ட பிரதான வீதி.

கண்டி (Kandy) அக்குரணையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை, தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்…! நுவரெலியாவில் பரபரப்பு…!

நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் பிரதான வீதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணின் சடலமொன்று இன்று(02) மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முதியோர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கண்டறியப்படவில்லை. குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அதேவேளை,  இச்சம்பவம் தொடர்பான திம்புல பத்தனை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு? – கிடைத்த தகவலால் பரபரப்பு! விசேட பாதுகாப்பு

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிசார் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடு சென்ற மாணவிகளை தடுத்துவைத்து அச்சுறுத்திய இளைஞர்கள் – கண்டியில் நடந்த பரபரப்புச் சம்பவம்…

கண்டி – பன்வில பகுதியில் 5 பாடசாலை மாணவிகளை தடுத்துவைத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்துகொண்ட 5 மாணவிகளே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். புலமை பரிசில் பரீட்சை செயலமர்வு நிறைவடைந்த நிலையில், 10 வயதான 5 மாணவிகள் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், மாணவிகளை இடைமறித்து தடுத்து வைத்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த மாணவி ஒருவர் மீது, இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவிகள் வீடு திரும்பாததை அடுத்து, மாணவி ஒருவரின் தந்தை தேடி சென்ற போது, மாணவிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்து இளைஞர்களிடமிருந்து  மாணவிகளை மீட்டுள்ளார். இதன்போது மாணவிகளை தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞர்கள், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளைஞர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவிகள் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக பரவிய செய்தி, உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

ரயிலில் இருந்து தப்பியோடிய ரயில் சாரதியின் பணி இடைநிறுத்தம்!

சர்ச்சைக்குரிய ரயில் இயந்திர சாரதி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி புறப்படத் தொடங்கிய ரயிலின் சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய போது, ​​ரயிலில் இருந்த பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி சாரதியை ஈடுபடுத்தி ரயில் கண்டி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், குடிபோதையில் இருந்த ரயில் சாரதியை ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை  சென்றடைய வேண்டும் என்ற நிலையில்,   மதியம் 2.30 மணிக்கே ரயில் கண்டியை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

அடுத்த ஆட்சி மாற்றத்தோடு மலையகமும் மாற வேண்டும் : மனோ எம்.பி. தெரிவிப்பு

அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தை அடுத்து, இது ஒட்டு மொத்த பெருந்தோட்டத் துறையிலும் முறை மாற்றமாக பரிணமிக்க வேண்டும். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நாம் இன்று ஈடுபட்டுள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோது தெரிவித்தாவது, “நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை உட்பட கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள் வாழ்கின்றன. இம்மக்களுக்கு பெருந்தோட்ட நிலங்களில், வதி விட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத் தந்து அவர்களை இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கின்றது. இந்த விவகாரங்கள் தொடர்பான உள்நாட்டு அரசியல் சட்டவாக்க நடவடிக்கைளை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ளும். அதற்கான பலம் மற்றும் தூரப்பார்வை எம்மிடம் உள்ளது. அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு உள்ளே சென்று திட்டங்களை வகுப்பதை விட, முன்கூட்டியே முன் தயாரிப்பு நடவடிக்கைகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் மலையக சிவில் சமூகத்துடனும் நாம் தற்போது கலந்துரையாடுகின்றோம். மக்கள் ஆணை கொண்ட அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து பணியாற்றக் கூடிய மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பற்றியும் நாம் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்துக்கு அறிவிப்போம். ஐ.நா. நிறுவனங்களான உணவு விவசாய நிறுவனம், யுனிசெப், உலக உணவு நிறுவனம் ஆகியவை ஊடாக எமக்குத் தொழில்நுட்ப, அபிவிருத்தி, ஒத்துழைப்புகளை வழங்க ஐ.நா. முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் முன்வைத்துள்ளோம் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.” – என்றார். இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி/ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் எம். பரணிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வெளிநாடு சென்று திரும்பிய அடகுக்கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்த முகாமையாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் தனியார் தங்க நகை அடகு கடை ஒன்றில் பணிபுரிந்த முகாமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (26) ஹட்டன் நீதவான் எம்.பறூக்தீனிடம் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஜூலை 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர் அடகுக் கடையின் முகாமையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வந்ததாகவும், அடகுக் கடையின் உரிமையாளர் மூன்று மாதங்களுக்கு  வெளிநாட்டிற்குச் சென்று மீண்டும் நாடு திரும்பிய நிலையில், அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தைச் சோதனையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அடகுக்கடையில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அடகுக்கடையின் உரிமையாளர், முகாமையாளருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கமையவே சந்தேகநபரான முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.