முன்னர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் சதொச(sathosa) மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைகளில் நீண்ட வரிசையில் நின்றனர்.
ஆனால் பொருளாதார நெருக்கடி(economic crisis) சற்று தளர்ந்து பொருட்கள் வந்த பின்னர் அந்த வரிசை அற்றுப்போனது. தற்போது மற்றுமொரு வரிசைக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.
ஆம் அதுதான் தேங்காய் வரிசை. வீட்டின் சமையல் கூடத்திலிருந்து தேநீர்கடை வரை நாளாந்தம் பயன்படுத்தும் பொருள் தேங்காய் ஆகும்.
எனவே அது அனைவருக்கும் முக்கியமான அத்தியாவசிய பொருளாகும். அந்த வகையில் தற்போது அதனை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசை ஒன்றில் நின்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதுதான் பத்தரமுல்லை தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய” கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்று தேங்காய்களை பெற்றுள்ளது.
இதேவேளை தேங்காயின் விலை மேலும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது. தேங்காய் அறுவடை குறைந்ததாலும், தேங்காய் தொடர்பான ஏற்றுமதிக்கு தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.