யாழ்ப்பாணம்(Jaffna) நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது நெடுந்தீவு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் (வயது 23) என்பவரே அடி காயங்களுடன் குறித்த பகுதியில் சடலமாக இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.