வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்…! நுவரெலியாவில் பரபரப்பு…!
நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் பிரதான வீதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணின் சடலமொன்று இன்று(02) மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முதியோர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கண்டறியப்படவில்லை. குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான திம்புல பத்தனை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்.
முல்லைத்தீவு(Mullaitivu) – மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று(02.07.2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாள்களுடன் இரண்டு வீடுகளுக்கு சென்ற குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு வாள் வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்சில் இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் உயிரிழப்பு.
பிரான்சில் இலகுரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரான்ஸ் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மன்னார்-மடுமாதா நினைவுத் தபால் முத்திரை வெளியீடு
மன்னார், மடுமாதா திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத் தபால் முத்திரை நேற்று வெளியிடப்பட்டது. மன்னார், மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை நேற்று மடு திருத்தலத்தில் வெளியிடப்பட்டது. மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ். என்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட இந்த விசேட முத்திரை, மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று முதல் இலங்கையில் ஒக்டேன் 100 பெட்ரோல் விற்பனைக்கு
லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) இன்று (02) முதல் ஒக்டேன் 100 பெட்ரோலை தனது பல விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கையில் XP100 இன் உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு Ninewells LANKA IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கௌரவ எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கௌரவ LIOC தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அதன் படி உலகில் இவ்வகை பெட்ரோலை விற்பனை செய்யும் எட்டாவது நாடாக இலங்கை மாறும். நவீன வாகனங்களில் பயன்படுத்துவதற்கு உகந்த இவ்வகை எரிபொருளின் மூலம் அதிக மைலேஜுடன் சீரான ஓட்டம் மற்றும் அதிக எஞ்சின் செயல்திறனை அனுபவிக்க முடியும் என லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது. இந்த வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 793 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
போதைபொருளுடன் உத்தியோகத்தர் கைது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் திங்கட்கிழமை (01) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதா? – அதிகாரிகள் விசாரணை
யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி குறித்த பகுதிப் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதிகாரிகள் குறித்த இல்லத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் உணவகத்திற்கு சீல் ; 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிப்பு !
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது, பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த முறை அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து திருத்த வேலைகளை செய்யாதமை, தொடர்ந்து சுகாதார சீர்கெட்டுடன் உணவகத்தினை நடாத்தி சென்றமை உள்ளிட்டவற்றை கண்டறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, திருத்த வேலைகள் முடிவடையும் வரையில் உணவகத்தை சீல் வைத்து மூட உத்தரவிட்ட மன்று, 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.
அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணில் வெளியிட்ட அறிவிப்பு.
சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். அத்தோடு, நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை விடவும் மாற்றுக் கொள்கைகள் இருந்தால் அவ்வாறான விடயங்களை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் அரசாங்கத்தின் செலவில் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அதிரடியாக களமிறங்கும் இராணுவம் – ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு.
நாட்டின் பொதுமக்களிற்கு பாதுகாப்பு வழங்குமாறு இராணுவப்படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.