Search
Close this search box.

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் பலி!

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-06 வீதியில் குருநாகலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது பின்னால் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். லக்கல மற்றும் மாத்தளை பிரதேசத்தில் வசித்து வந்த 29 மற்றும் 40 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குருநாகல்-புத்தளம் வீதியின் கெலிமுனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தரம் 9 மாணவர்களுக்கு புதிய கல்வி முறைமை – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

பாடசாலை பருவத்திலிருந்தே தொழில் முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மாற்றமடையும் புதிய கல்வி முறையின் மூலம், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்கால வாழ்க்கையைத் தெரிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களைக் கொண்ட பிரஜையை உருவாக்குவது கல்வியின் அடிப்படை நோக்கம் என்றும், முன்பள்ளிக் கல்வியில் இருந்தே திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்ப்பதற்குத் தேவையான அடித்தளத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதற்காக யுனெஸ்கோ, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் பிற அறிஞர்களின் ஒத்துழைப்புடன் ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. எதிர்காலத்தில் பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

டெவோன்-5 மீன்பிடி கப்பலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் அறிவிப்பு…

டெவோன்-5 பல நாள் மீன்பிடி கப்பலின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடலில் மிதந்த போத்தலில் இருந்து பானத்தினை குடித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், டெவோன்-5 கப்பலில் உள்ள கப்பலின் பேரிடர் கண்காணிப்பு பொத்தான் இயக்கப்பட்டு பேரிடர் குறித்து அறிவிக்கப்படாதது வேதனையான உண்மை என்றும் அமைச்சர் கூறுகிறார். இவ்வாறு அறிவித்திருந்தால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அமைச்சர் கூறுகிறார். Dovon-5 கப்பல் நிலத்திலிருந்து 360 கடல் மைல் தூரம் அதாவது 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும், விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் இவ்வளவு தூரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாகவும், குறித்த கப்பல் சுமார் ஒரு ஹெலிகாப்டர் சாதாரணமாக பயணிக்கக்கூடிய தூரத்தை விட 04 மடங்கு தூரத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.  

கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு? – கிடைத்த தகவலால் பரபரப்பு! விசேட பாதுகாப்பு

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிசார் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மற்றும் கோவிலுக்கு அருகில் மதுபானசாலை. எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த மக்கள்..

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இயக்கச்சி சந்தியில் புதிதாக மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதையடுத்து கிராம மக்கள் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (02)காலை 10.00 மணியளவில் இயக்கச்சி சந்தி ஏ09 வீதி அருகே இடம்பெற்றது. குறித்த மதுபான சாலை அமைய இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் பாடசாலை அமைந்துள்ளதாகவும், எதிரில் கோவில், இயக்கச்சி பொதுச்சந்தை என அதிகளவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடமாகவுள்ளதாகவும், குறித்த இடத்தில் பேரூந்து தரிப்பிடம் ஒன்று உள்ளதெனவும் அதில் தூர பிரதேசங்களில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் பேரூந்துக்காக காத்திருக்கும் இடமாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கினால் பல குற்றச்செயல்கள் இடம்பெறும் எனவும் பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கபெறாது எனவும் தெரிவித்தனர். இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள அனைத்து கடைகளும் போராட்டத்தின் போது கதவடைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். போராட்டத்தின் முடிவில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பளை பிரதேச அமைப்பாளரிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

சம்பந்தனுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி…! எம்.பிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை…!

பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு  நாளை(03)  பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், இதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இரா. சம்பந்தனின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக நளை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த சேவைகளின் பணியாளர்களிடம் செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு – தீவிர முயற்சியில் இறங்கிய பிக்குகள் குழு..

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் குழுவொன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு விஜயம் செய்து உண்மைகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தேசிய சங்க கூட்டமைப்பு, ராவணா சக்தி, சிங்கள அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் நேற்றுமுன்தினம் (ஜூன் 30) ​​முதலில் அஸ்கிரி மகா விகாரைக்கு வந்து அஸ்கிரிய கட்சியின் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன் தேரருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு வந்த பிக்குகள் குழுவினர் மல்வத்து மகா விகாரையின் மஹா தலைவர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு அறிவித்தனர். இங்கு, கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு பெளத்த உயர் பீடங்கள் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியதாகவும், ஆனால் அது தொடர்பில் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் இரு பீடாதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது குறித்து மீண்டும் ஒருமுறை விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட இராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிக்கையில், ஜனாதிபதியிடம் கலந்துரையாடியது போலவே ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகிய இரு தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடிய போதும், அவர்களின் முக்கிய மத அமைப்பான ஜம்மியத்துல் உலமாவிடம் இது குறித்து கலந்துரையாடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த அமைப்புடன் கலந்துரையாட உள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தனுக்கு பாராளுமன்றத்தில் சபாநாயகர் இரங்கல் தெரிவிப்பு…!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இன்று காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார். நேற்று முன்தினம் மறைந்த  முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான  இரா சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நாளைய தினம் மாலை இரண்டு மணி முதல் நான்கு மணிவரை இரா சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்ற முன்றலில் அஞ்சலிக்க்காக வைக்கப்படும் என சற்று முன்னர் அறிவித்துள்ளார். அதே வேளை சம்பந்தனின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணை விரைவில் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை!

பாராளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. அதன்படி, வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார். ஜனாதிபதி தனது உரையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் இருதரப்புக் கடன் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் , பலதரப்புக் கடன்  11.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்,  வணிகக்கடன் 14.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்   & இறையாண்மைப் பத்திரங்கள் 12.5 பில்லியன்  அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறன்றது. கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடந்த ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.

பொத்துவில் பகுதியில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் பலி..

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான இஸ்ரேலியர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.