வவுனியாவில் இயங்காத கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
வவுனியா வைரவர்புளியங்குளத்தை மையமாக கொண்டு ஒரு காலத்தில் இயங்கிய, 1999ம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்த விளையட்டு கழகம் “ஏசியன் விளையாட்டுக்கழகம்” அப்போதைய காலகட்டத்தில் ரெலோ உறுப்பினராக இருந்த கிறிஸ்ரி குகராஜா அவர்களின் வழிநடத்தலில் இயங்கிய அந்தக்கழகம் வைரவர்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இப்போது உள்ள மிக்சர் விற்பனை செய்யும் கடை கட்டிடத்தில் ரெலோவின் அரசியல் பிரிவு காரியாலயமும் மக்கள் சந்திப்பு காரியாலயமும் இயங்கி வந்தது அத்துடன் ஏசியன் கூல்பார் எனும் விற்பனை நிலையமும் இயங்கி வந்தது இதனை பிரதிபலிக்கும் வகையிலேயே ஏசியன் விளையாட்டுக்கழகமும் அமையப்பெற்றிருந்தது இந்த காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கும் ரெலோ அமைப்பிற்கும் இடையில் கடும் மோதல்கள் இருந்த காலம் புளொட் அமைப்பின் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் நங்கூரம் விளையாட்டுக்கழகமாகவும் ரெலோ மாணவர் ஒன்றியத்தினர் ஏசியன் விளையாட்டுக்கழகமாகவும் பெரும்பாலும் இயங்கி வந்தனர் இதன் போது சன்டிவி ஒளிபரப்பையும் ரெலோ அமைப்பினர் மேற்கொண்டு வந்துடன் அதற்கான ஒரு காரியாலயமாகவும் அந்த ரெலோவின் அரசியல் பிரிவு கட்டிடமே இருந்தது சன்டிவியில் பணியாற்றிய ரகுமான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் கொஞ்ச கொஞ்சமாக ஏசியன் கழகம் உடையத்தொடங்கியது 1999ல் குகண் அவர்களின் இறப்பிற்கு பின்னர் முற்றிலுமாக ஏசியன் கழகம் இயங்காமல் போனது இப்படி இருக்கும் போது வைரவர்புளியங்குளத்தில் உள்ள கிராம அலுவலர் காரியாலயத்தில் 2021ம் ஆண்டில் வைரவர்புளியங்குளம் கிராமத்திற்கு அபவிருத்தி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள் பட்டியலிடப்பட்ட அறிவித்தல் பலகை ஒன்றில் ஏசியன் விளையாட்டுக்கழகத்திற்காக ரூபா 60000 நிதி பெருமதியுடைய விளையாட்டு உபகரணங்கள் வழங்க வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த நிதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலையில் மாற்றம்!
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 199,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24, 875 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
100 ரூபாவுக்காக தந்தை செய்த கொடூரச்செயல்!
தனது மகன் நூறு ரூபாய் பணத்தைத் திருடினான் என்ற குற்றத்திற்காகத் தந்தையால் மகனுக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தந்தையைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை,மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயைத் திருடிச் செலவழித்தான் என்ற குற்றத்திற்காகவே தந்தையால் நேற்று முன் தினம்(15) இக்கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, தனது சட்டைப் பையில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த கோபமுற்ற தந்தை மகனுக்குச் சூடு வைத்துள்ளார். அடுத்த நாள் பாடசாலைக்குச் செல்ல முடியாதென்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறியதையடுத்து பாடசாலைக்குச் செல்லா விட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான். நேற்று(16) பாடசாலை சென்ற மாணவன் வகுப்பறையில் சோகமாக இருந்ததை அவதானித்த வகுப்பாசிரியர், மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தைத் தெரிவித்துள்ளான். விடயத்தை அறிந்த பாடசாலை நிர்வாகம், வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச்சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவனின் தந்தையைக் கைது செய்த காவல்துறையினர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிதி அமைச்சின் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்!
உத்தேச ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமாகியுள்ள பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. தேர்தல் தொடர்பான பல அடிப்படை ஆவணங்கள், அச்சிடல் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியேற உத்தரவிடுமாறு கோரிக்கை!
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு கோரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பிரவேசிப்பதற்கும், அதன் விவகாரங்களில் தலையிடுவதற்கும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, 5 வழக்குகளிலிருந்து அவரை 75,000 ரூபாய் பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் விடுவித்தது. எனினும் அவர் வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, குறித்த விடுதியிலிருந்தும் வெளியேற வேண்டும் என உத்தரவிடக்கோரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றை நாடியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரணவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விடுதிகள் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார். அத்துடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரண வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்துள்ளார். அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும்Dr.அசேல குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மருந்துகளுக்காகச் செலுத்த வேண்டிய நிலுவை 800 மில்லியனை அண்மித்தது!
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்காக விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 800 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம், மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து தாம் பெற்றுக் கொண்ட தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய்க் கப்பல் மூழ்கியதில் இலங்கையர் மூவர் மாயம்!
ஓமானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலொன்று மூழ்கிக் காணாமல் போயுள்ளதுடன், அதனுடன் 3 இலங்கையர்களும் காணாமல் போயுள்ளதாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலின் பணிக்குழாமில் 13 இந்தியர்களும், 3 இலங்கையர்களும் அடங்குவதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை கடலில் மூழ்கிய குறித்த எண்ணெய்க் கப்பல் தற்போது முழுவதுமாக காணாமல் போயுள்ளதாகவும், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொமொரோஸ் கொடியுடன் பயணித்த இந்த எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரஸ்டீஜ் போல்கன் என்ற குறித்த கப்பல் ஏமனின் துறைமுக நகரமான ஏடனை நோக்கிப் பயணித்துள்ளதாகக் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளமொன்றில் பதிவாகியுள்ளது. 2007ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த எண்ணெய்க் கப்பல் 117 மீற்றர் நீளமுடையது எனக் கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன. கப்பல் கவிழ்ந்தமைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. கப்பலின் பணிக்குழாமினர் இதுவரையில் மீட்கப்படவில்லை எனவும் தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
சிறுவனை மிகக் கொடூரமாக தாக்கிய பெண்கள் – நால்வர் கைது
சிறுவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (17) காலை அரநாயக்க பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குழந்தையின் தாய், இரண்டு பாட்டி மற்றும் மற்றுமொரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வயது குழந்தையின் இரண்டு பாட்டிகளால் இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, மேலும் தாக்குதலுக்கு உதவியதற்காக குழந்தையின் தாயும் மற்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்று (17) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குழந்தை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவன் ஒருவன் இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரநாயக்க பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாட்டின் மீது ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவன் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, அண்மைய நாட்களால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சிறு குழந்தைகளை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு..! பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட மகிந்தானந்த
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைப்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தனது ஆதரவை தெரிவித்துள்ளார். எனினும் பொதுஜன பெரமுன தரப்பில் கூறப்படும் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை என்றும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார் விக்ரமசிங்கவின் முதிர்ச்சி, சர்வதேச அனுபவம் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் ஆகியவை, அவர் நாட்டை வழிநடத்துவதற்கு பொருத்தமானவர் என்பதற்கான முக்கிய அம்சங்கள் என்று அவர் எடுத்துரைத்துள்ளார். இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில், இது தொடர்பான கொள்கை அடிப்படையிலான தீர்மானத்தை எட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இதன்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார், அவருடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய கூட்டணியில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.