Search
Close this search box.

லயன்களைக் கிராமங்களாக்கும் திட்டத்துக்கு திகாம்பரம் எம்.பி எதிர்ப்பு..!

மலையக பகுதியில் தற்போது இருக்கின்ற லயன்களை கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்ற நிலையில் இதற்கு  நாம் உடன்பட முடியாது என்பதுடன் மக்களும் உடன்படமாட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட குடியிருப்பு பகுதியைக் கிராமங்களாக அறிவிக்கும் திட்டம் பற்றியே பேச்சு நடத்த வந்திருந்தோம். நல்லாட்சியின் போது நான் அமைச்சராக இருந்தேன். தனி வீடுகள் அமைக்கப்பட்டே காணி உரித்துடன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இவர்கள் லயன்களைக் கிராமங்களாக்கப் பார்க்கின்றனர். இதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவாகக் குறிப்பிட்டோம். எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டு, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டே கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். காணி உரிமைக்கான எமது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்தான் இருக்கின்றோம். ஜனாதிபதியுடனான சந்திப்பில் தேர்தல் பற்றி பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

திருமணம் செய்து இஸ்ரேலுக்கு செல்லவிருந்த இளம் தாதி எடுத்த விபரீத முடிவு

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணிபுரிந்த யுவதியொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக ரக்வான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹவத்த – அந்தண கிராம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரக்வான அலுத்கெல்ல பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த யுவதியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், மூன்று சகோதரர்கள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தான் திருமணம் செய்யவிருந்த நபருடன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாட்டி பொலிஸில் தெரிவித்துள்ளார். இதேவேளை, யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பஹ்வவத்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பிரேத பரிசோதனை நேற்று  வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

நாட்டிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்..!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 1300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம்(17) விஜயம்  மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது இலங்கையில் 24,000 பேர் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். வெகுவிரைவில் 3500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் 3000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றனர். இதனால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக்கூடியதாக இருக்கின்றது. தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர். எனினும் தற்பொழுது துறைசார்ந்த  வைத்திய நிபுணர்கள் நட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது. துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10-15 வரையிலான வைத்தியர்கள் நாட்டிற்கு மீளவும் வருகைதந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது என்றார்.

தேர்தலுக்கான நிதி வழங்கள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.  மேலும் வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் எந்த வகையான தேர்தல்கள் நடந்தாலும்  அதற்கான  செலவீனமாக 10பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அரசாங்கம் கடுமையான நிதி  நெருக்கடியில் உள்ளபோதும்  தேர்தலுக்கு நிதி வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தேர்தலுக்கு நிதி வழங்குவது தொடர்பில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி   ‘நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிவாரணங்களுக்காக அரசாங்கம் பல பில்லியன் ரூபாவை செலவு செய்து வருகிறது. அதனால், தேர்தலுக்கு நிதிச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி தற்போது வரையில், பாராளுமன்றத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நிதி இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தேர்தல் ஆணைக்குழு கேள்வி எழுப்புவதற்கான எந்த அவசியமும் இல்லை’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் புதிய மாற்றம்! வெளியான அறிவிப்பு…

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யப்பட வேண்டும். ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதியமைச்சர் அவசர கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலின் போது சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, தேர்தல் கலாச்சாரத்தை மாற்றி சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்துக்காக, தேர்தல் ஆணைக்குழுவின் பூரண ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலுக்கு அந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான தந்திரங்களை கையாண்ட போதிலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்குபவரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்குவார் என பாராளுமன்ற உறுப்பினர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

பெறுமதி சேர் வரி என்ற வெட் வரியுடன் தொடர்பான வருவாயில் சுமார் 20% வசூலிக்க முடியாத அபாயத்தில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வினைத்திறனற்ற மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் இதுவரை அறவிடப்படாத வெட் வரி தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை வெளியிடும் போதே தேசிய கணக்காய்வு  அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் ஆவணங்களின்படி, டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, வெட் வரி நிலுவைத் தொகை மற்றும் அந்த நிலுவைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களின் மதிப்பு 369 பில்லியன் ரூபாயாகும், இதில் 255 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை பல்வேறு காரணங்களுக்காக வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டுகிறது. மீளப்பெறக்கூடியதாக இனங்காணப்பட்டுள்ள 114 பில்லியன் ரூபா வரி நிலுவைத் தொகை 13 வருட காலத்திற்கு நிலுவையில் உள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட வேண்டிய வெட் வரி உரிய காலத்தில் வசூலிக்கப்படாததால் பொதுமக்கள் ஏற்கனவே தியாகம் செய்து அரசாங்கத்திற்கு வருமானமாக செலுத்திய வரியில் பெருமளவிலான வருமானம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தல் அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது கடமைகளை உரிய நேரத்தில் மற்றும் அதிகபட்ச வினைத்திறனுடன் நிறைவேற்றத் தவறியதே அரசாங்கத்திற்கு  இந்த வரிப்பணம் இழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரி நிலுவையை திறமையற்ற முறையில் கையாள்வது குறித்து முறையான ஆய்வை மேற்கொள்ளவும், காரணங்கள் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து, வரி நிலுவைகளை உடனடியாக வசூலிக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும்,  மோசடியாக, கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே, வசூலிக்கப்படும் நிலுவைத் தொகை மற்றும் அபராதங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தொடர்பில் நிறுவன அளவில் விசாரணை நடத்தப்பட்டு அந்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை..

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் இயங்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ளதால், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும். இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென்மேற்கு பருவ நிலையால், நாடு முழுவதும் தற்போதைய காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40  கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர் பலி!

இத்தாலியில் ஆற்றில் மூழ்கி இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ரமேஷ் கணேகெடெர என்ற 23 வயதுடைய இலங்கையரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை பிரஜையை காப்பாற்றுவதற்காக சென்ற ருமேனிய பிரஜையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த இலங்கை இளைஞன் உதைபந்தாட்ட வீரர் எனவும், அவரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் உயிரிழந்த ருமேனிய வீரர் மல்யுத்த வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இலங்கையர் இத்தாலியின் பதுவாவில் வசித்து வந்தவர் என அந்நாட்டு பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.