தனது மகன் நூறு ரூபாய் பணத்தைத் திருடினான் என்ற குற்றத்திற்காகத் தந்தையால் மகனுக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தந்தையைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை,மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயைத் திருடிச் செலவழித்தான் என்ற குற்றத்திற்காகவே தந்தையால் நேற்று முன் தினம்(15) இக்கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது,
தனது சட்டைப் பையில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த கோபமுற்ற தந்தை மகனுக்குச் சூடு வைத்துள்ளார்.
அடுத்த நாள் பாடசாலைக்குச் செல்ல முடியாதென்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறியதையடுத்து பாடசாலைக்குச் செல்லா விட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.
நேற்று(16) பாடசாலை சென்ற மாணவன் வகுப்பறையில் சோகமாக இருந்ததை அவதானித்த வகுப்பாசிரியர், மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தைத் தெரிவித்துள்ளான்.
விடயத்தை அறிந்த பாடசாலை நிர்வாகம், வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச்சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவனின் தந்தையைக் கைது செய்த காவல்துறையினர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.