யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விடுதிகள் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரண வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்துள்ளார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும்Dr.அசேல குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.