Search
Close this search box.

புத்தர் சிலைகளை உடைத்து வீசிய இளைஞர்.

புத்தர் சிலை உள்ளிட்ட தெய்வ சிலைகளை உடைத்து, மதங்களை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (15) அம்பன்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் கல்கமுவ, அம்பன்பொல சமகி மாவத்தையில் வசிக்கும் 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தான் முன்னர் மிகுந்த இறை பக்தியுடன் இருந்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பல ஆண்டுகளாக மிகுந்த பக்தியுடன் கடவுளுக்கு சேவை செய்து வருவதாகவும் கூறினார். எனினும், அதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே புத்தர் சிலைகள் மற்றும் தெய்வச் சிலைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில், கைது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே சிகிற்சை வழங்கிய மருத்துவ மாணவி கைது!

வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில் 6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார். கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர். மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண் தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர். இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இலங்கையர்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை..!

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால்  கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதால் குறித்த பகுதிகளில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, வரைபடத்தில் ‘சிவப்பு’ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடற்படையினர் மற்றும்  மீனவ சமூகத்தினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும்  கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்…!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கு  வருகைதந்துள்ளார். மூன்று பேர் அடங்கிய குழுவுடன் இன்று வருகை தந்த ஒட்ரே அசோலேவை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர். இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு அவரின் வருகை அமைந்துள்ளது. இவ்வாறு வருகை தந்த ஒட்ரே அசோலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் என்றும் இன்று(16)  முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவம்: இராணுவத்தினர் விசேட விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இராணுவத்தினரும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு !

ஜூலை மாதம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்பாடு செய்துள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் என்பனவற்றுக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம் எனவும் தேர்தலை நடத்துவதற்கு தடையேதும் கிடையாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சட்டவிரோத நியமனங்களை இடைநிறுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க குறிப்பிட்டார்.

ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் அடைத்த இலங்கை..!

சிலோன் தேயிலை ஏற்றுமதியானது, ஈரானுக்கு செலுத்த வேண்டிய 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த  உதவியுள்ளதென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 251 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில், இந்த காலப்பகுதியில் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்ததன் மூலம் தீர்வு எட்டப்பட்டதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியினால் மோசமாக்கப்பட்ட நிதி சவால்களை எதிர்கொண்ட இலங்கை, அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஈரானுக்கான தனது கடனை திருப்பிச் செலுத்த போராடியது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேயிலை ஏற்றுமதி மூலம் நிலுவையில் உள்ள கடன்களை தீர்ப்பதில் கவனம் செலுத்தி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜனவரி முதல் மே 2024 வரை ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 4.98 மில்லியன் கிலோகிராம்களாக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1.85 மில்லியன் கிலோகிராம்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முக்கிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளால் பரபரப்பு…!

கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய  அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட 06 அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நிர்மாணப் பணி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள வைத்தியர் அர்ச்சுனா

வவுனியா வைத்தியசாலைக்கு (District General Hospital Vavuniya) விரைவில் வருவேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளதுடன், அங்கு முன்னர் பல விடயங்கள் இடம்பெற்றதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். வைத்தியர் அர்ச்சுனா சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.சுகுணன் வவுனியா வைத்தியசாலைக்கு வாருங்கள் என சமூக ஊடகத்தில் பதில் அளித்திருந்தார். குறித்த பதிலுக்கு விளக்கமளித்து காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் கூப்பிட்டு வராமல் இருப்பது எப்படி. வவுனியா வைத்தியசாலைக்கு கட்டாயம் வருவேன். அங்கும் நிறைய விடயங்கள் முதலே நடந்திருக்கிறது கட்டாயம் வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

நீதி மறுக்கப்படுவதே சமூக பதற்றத்துக்கான காரணம் : விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு

சமூக நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் நீதியின் முக்கிய பங்கை இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) வலியுறுத்தியுள்ளார். நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நீதியை மறுப்பதால் ஏற்படும் விளைவுகளையும், சரியான நேரத்தில் சட்ட நடைமுறைகளின் அவசரத் தேவையையும் எடுத்துரைத்துள்ளார். நீதி மறுக்கப்படுவதால், அனைத்து மூலைகளிலிருந்தும் அமைதியின்மை தவிர்க்க முடியாமல் பின்தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைதியின்மை எதிர்பாராத வழிகளில் வெளிப்பட்டு, சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில்,2022 இல் இலங்கையின் போராட்டங்கள், தாமதமான நீதி எவ்வாறு பதற்றங்களை அதிகரிக்கலாம் மற்றும் அமைதியை அச்சுறுத்தும் என்பதற்கு தெளிவான உதாரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட செயல்முறைகள் தடைப்படும் போது அல்லது நீதி தாமதமாகும்போது குழப்பம் ஏற்படலாம். இத்தகைய சீர்குலைவுகளைத் தடுக்க, சட்டத்தின் ஆட்சியை அசைக்காமல் நிலைநிறுத்த வேண்டும். அத்துடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் நீதி வெல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். லீ குவான் யூ மற்றும் மகாதீர் முகமது ஆகியோரை உதாரணம் காட்டிய அமைச்சர், மக்கள் நம்பிக்கைக்கு மாறாக, இந்த தலைவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை தனித்தனியாக உருவாக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மாறாக, குடிமக்களின் கூட்டு முயற்சிகளே முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் வழிவகுத்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.