Search
Close this search box.

தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தற்காலிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ன நியமிக்கப்பட உள்ளார். நிரோசன் பிரேமரட்னவை அதிகாரபூர்வமாக தலைமைப் பதவியில் அமர்த்தும் நிகழ்வு இன்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் நடைபெறவுள்ளது. கட்சியின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்னவை தலைமைப் பதவியில் அமர்த்துவதாக முன்னணியின் பிரதி செயலாளர் ஜே.டி.வீ திலகசிறி தெரிவித்துள்ளார். குறிப்பாக கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சஜித்திற்கு உயிர் அச்சுறுத்தலா! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் சஜித்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி நிசத் விஜேகுணவர்தன ஆகியோர் இந்த கோரிக்கையை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து தகவல் கிடைக்கப் பெற்ற போதும் சிலர் இவ்வாறு கூறியிருந்ததாக லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தல் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கடிதங்கள் அனுப்பி வைத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் குஜராட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு காணப்படும் ஆபத்து குறித்து தெரியவந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

அதிகரிக்கும் காணி பிரச்சினை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”காணி பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. நிலம் தொடர்பான வழக்குகளை தீர்க்க பல ஆண்டுகளாக மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் காணி அமைச்சர்களும் இருந்தனர். ஆனால் அவர்களால் மக்களின் காணி பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதி உறுமய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். குறைந்த பட்சம் இந்த பிரதேசத்தில் இருக்கும் ஜே.வி.பி.யின் தலைவரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இந்த ரஜரட்ட பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்கு அரிசி வழங்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தில் இருந்தும் ரஜரட்டவுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ரஜரட்ட பிரதேசத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களே அவதானம்! காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு.

நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இயங்குநிலை தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமை காரணமாக இவ்வாறு காற்று நிலைமை அதிகரிக்கும் என  அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.’ இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீ அளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”சமூகத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களை செய்யும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளபடுகின்றன. அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதுடன் நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. கடந்த 3, 4 மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம்.” என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரயிலில் பாய்ந்து உயிரிழந்த இளைஞன் – பொலிஸார் மீது குற்றம்சுமத்தும் பெற்றோர்

அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். 22 வயதான சுபுன் ரந்திக எனும் இளைஞனே  உயிரிழந்தவராவார். அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன் ஒருவன் தகறாறு செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பின்னர் அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நேற்றிரவு இளைஞனை அழைத்துச் சென்றபோது, ​​குறித்த இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து இரவு உணவு கொடுத்த பின் உறங்கச் செய்துள்ளனர். அதன் பின் இன்று (15) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தமது வீட்டிற்கு வந்ததாகவும், தமது மகன் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாகவும் இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். பின்னர் இன்று காலை 7 மணி அளவில் தமது மகன் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அங்குலான மயானத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் இன்று காலை உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தலங்கம – கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய  பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகொட – புறக்கோட்டை மற்றும்  கடுவெல – கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளாகியது. மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, ​​கடுவெலயிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து  பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவில் வேலை – பணத்தை மோசடி செய்த இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட போதிலும், வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதன்படி, குறித்த நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(15) மேலும் அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 297.80 முதல் ரூ. 295.50 மற்றும் ரூ. 307.30 முதல் ரூ. முறையே 305.00. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 296.65 முதல் ரூ. 295.91, விற்பனை விகிதமும் ரூ. இருந்து குறைந்துள்ளது. 307.29 முதல் ரூ. 306.53. கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 296.95 முதல் ரூ. 295.68 மற்றும் விற்பனை விகிதம் ரூ. இருந்து குறைந்துள்ளது. 306.75 முதல் ரூ. 305.50. சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 298 முதல் ரூ. 297 மற்றும் ரூ. 307 முதல் ரூ. முறையே 306 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம யாழிற்கு விஜயம்…!

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றையதினம்(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறும் மூன்று மாவட்டங்களுக்கான கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் இரு திட்டங்களும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒரு திட்டமும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் 980 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு திட்டம் குறித்தும், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் 170 ஏக்கர் நிலப் பரப்பில் மற்றொரு திட்டம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன. அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  காங்கேசன்துறை கடற்கரைப்  பூங்கா மற்றும் காங்கேசன்துறை விசேட முதலீட்டு வலயம் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.