முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் மைத்திரி தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்பு சலுகையின் கீழ் பொது நிதியை பயன்படுத்தியமை தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) 2005 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்புச் சலுகையின் கீழ் விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 978 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் உள் விமானங்கள் மூலம் மொத்தம் 131,277.17 கிலோமீட்டர் தூரத்தை பயணித்துள்ளார். ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பதவிக்காலத்தில் விமானப்படை ஹெலிகாப்டர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் ஹெலிகாப்டர் பயணத்திற்கு பொது நிதியை பயன்படுத்தியதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்த உடன்பட்ட இலங்கையும் அமெரிக்காவும்
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ளன. ஜூலை 12 ஆம் திகதி வோசிங்டனில் நடைபெற்ற 5வது இலங்கை-அமெரிக்கா கூட்டாண்மை உரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இரண்டு நாடுகளும் உறுதிப்படுத்தியதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின்கீழ், இலங்கையின் ஹைட்ரோகிராஃபிக் மேப்பிங் திறன்கள் மற்றும் துறையில் பணியாளர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்களை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இயங்குநிலை தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமை காரணமாக இவ்வாறு காற்று நிலைமை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தரமற்ற மருந்தினால் கண் பார்வை இழந்தவர்களுக்கான நட்டஈடு: சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு
தரம் குறைந்த மருந்துப் பொருட்களினால் கண் பார்வையை இழந்தவர்களுக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியசாலையில் தரம் குறைந்த பிரிட்னிசிலோன் (Prednisolone) என்ற மருந்து வகையை வழங்கியதனால் சிலர் கண் பார்வையை இழக்க நேரிட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இருப்பினும், இந்த நோயாளிகளுக்கு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த நட்டஈடு இதுவரையில் வழங்கப்படவில்லை என சுகாதார தொழிற்சங்க கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மருந்தினால் கண் பார்வையை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து வைத்தியசாலையில் தட்டுப்பாடாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்யும் போது பெருந்தொகை பணத்தை செலுத்த நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தரம் குறைந்த மருந்து பயன்பாட்டினால் கண் பார்வையை இழந்த நோயாளிகளை பராமரிக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சினை சார்ந்தது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நோயாளிகள் அரசாங்க வைத்தியசாலையில் மருந்து இன்றி தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்ய நேரிடுவது அநீதியானது என தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தடை – சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடைவித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவர் சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிசில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவும் உத்தரவிட்டார். தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அர்ச்சுனா நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்கா விட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இ.அர்ச்சுனா அண்மையில் சில களேபரங்களில் ஈடுபட்டு சமூக ஊடகங்களில் பிரபலமாகியிருந்தார். வைத்தியத்துறை மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியினால், அர்ச்சுனாவின் களேபரங்களின் வழி மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், அர்ச்சுனாவின் களேபரம் வைத்திய மாபியாவுக்கு எதிரான போராட்டமாக மாறாமல் நீர்த்துப் போனது. சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சாவகச்சேரி பொலிசார் இது குறித்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கையிட்டிருந்தனர். அது தொடர்பான 5 முறைப்பாடுகளில் இன்று (16) மருத்துவர் இ.அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார். இன்றைய வழக்கு விசாரணையில், முறைப்பாடளித்த வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இ.அர்ச்சுனா தனக்கு சட்டத்தரணிகளை நியமிக்கவில்லை. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமுகமான செயற்பாட்டுக்காக, அர்ச்சுனா அந்த வைத்தியசாலையின் நிர்வாகத்தில் தலையிட, வைத்தியசாலைக்குள் நுழைய நீதவான் தடையுத்தரவு பிறப்பித்தார். வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டது. அத்துடன், சமூக ஊடகங்கள் வழியாக ஏனைய வைத்தியர்களுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களுடன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவும் உத்தரவிடப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அர்ச்சுனா முன்வைக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும் நீதவான் குறிப்பிட்டார். அத்துடன், இன்றைய நீதிமன்ற வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிடவோ, நேரலை வெளியிடவோ நீதிமன்றம் தடைவிதித்தது. அர்ச்சுனாவை ரூ.75,000 பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார். நீதிமன்ற விசாரணையின் போது அர்ச்சுனா உணர்ச்சிவசப்பட்டு, அழுவதை போலவும் காண்பித்தார். அத்துடன், வழக்காளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மக்களுக்கு எதிரான வழக்கில் முன்னிலையாவதாக குற்றம்சாட்டினார். எனினும், தமது தரப்பு முறைப்பாட்டாளர்கள் சார்பில் மாத்திரமே தாம் முன்னிலையாவதாக ச்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
ஹெரோயினுடன் கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது!
210 கிராம் ஹெரோயினுடன் அரச பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதிமலுவ விகாரைக்கு அருகில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக பணிபுரியும் இவர், மிதிகம பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதுடன் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுப்பவர்களால் பெயரிடப்பட்ட நபர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருள் பெறுபவர்களும் சிறிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவராக இருந்த போதிலும், குறித்த பாடசாலை இந்த மோசடியில் ஈடுபடவில்லை எனவும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரிசி உற்பத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை
அடுத்த பருவத்தில் இருந்து நெல் பயிரிடும் ஆறு பிரதான விவசாயப் பகுதிகளில் இருந்து நாட்டுக்குத் தேவையான மொத்த அரிசியையும் உற்பத்தி செய்யும் திட்டத்தை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது அதிக நெல் விளைச்சலைக் கொடுக்கும் அனுராதபுரம் (Anuradhapuram), ஹம்பாந்தோட்டை (Hambantota), பொலன்னறுவை (Polonnaruwa), கண்டி (Kandy), அம்பாறை (Amparai) மற்றும் மொனராகலை (Monaragala) ஆகிய விவசாயப் பிரதேசங்களில் அதிக மகசூலைப் பெறுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. இந்தநிலையில், ஆறு பகுதிகளில் அரிசி உற்பத்தியை இரட்டிப்பாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது நாட்டின் வருடாந்த நுகர்வுக்கு தேவையான அரிசியின் அளவு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். இதில் 2024 ஆம் ஆண்டில் மொத்த தேசிய அரிசி தேவை 4.1 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும் இந்தநிலையில் 2023ஆம் ஆண்டில் 4.5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்ய முடிந்துள்ளது. இதன்படி, அரிசி உற்பத்தியானது எமது நாட்டின் தேசிய தேவையை விட அதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர்.
ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இழங்கைத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். நேற்று மாலை 6.00 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் பரிஸ் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார். இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணமல் போன நான்கு தமிழ் சிறுவர்கள் பதறும் பெற்றோர்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட நால்வரை காணவில்லையென காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரே காணாமற் போனவர்களாவர். கடந்த (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று நேற்று (15) திங்கட்கிழமை தலவாக்கலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் உட்பட மூன்று சிறுமிகளும் தமது பெற்றோருக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.தகவல் தெரிந்தால் அதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பெற்றோர் உதவி கோரியுள்ளனர் . இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு
சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது. மேலும் பாராட்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.