சிலோன் தேயிலை ஏற்றுமதியானது, ஈரானுக்கு செலுத்த வேண்டிய 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த உதவியுள்ளதென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல், ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 251 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டி இருந்தது.
இந்நிலையில், இந்த காலப்பகுதியில் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்ததன் மூலம் தீர்வு எட்டப்பட்டதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியினால் மோசமாக்கப்பட்ட நிதி சவால்களை எதிர்கொண்ட இலங்கை, அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஈரானுக்கான தனது கடனை திருப்பிச் செலுத்த போராடியது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேயிலை ஏற்றுமதி மூலம் நிலுவையில் உள்ள கடன்களை தீர்ப்பதில் கவனம் செலுத்தி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஜனவரி முதல் மே 2024 வரை ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 4.98 மில்லியன் கிலோகிராம்களாக இருந்தது.
இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1.85 மில்லியன் கிலோகிராம்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.