Search
Close this search box.

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த சுற்றுலாக் கப்பல்!

இந்தியா, சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (19) காலை ஆறு மணியளவில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலானது நேற்று முன்தினம் இலங்கை – ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலானது இன்று பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அதிரடி உத்தரவு – வெளியானது வர்த்தமானி

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ’06 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ’05 வருடங்களுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் நீதி அமைச்சின் செயலாளருக்கு நேற்று வியாழக்கிழமை பணிப்புரை விடுக்கப்பட்டது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். நீதியமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை நிறுத்தி வைத்த போதிலும் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

உலகளாவிய ரீதியாக முடங்கிய மைக்ரோசொஃப்ட் கணினிகள்

உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன. விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன. லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும்  18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ஊருபொக்க பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 2,347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை!

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமையை மாற்றுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்த விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவு, ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்த ஏல முறைக்குப் பதிலாக மாற்று முறையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைத்து திருட்டு சம்பவம்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று (18.07.2024)அதிகாலை இரு வீடுகள் உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்து பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். திருடர்கள் 1/2 பவுண் தோடு மற்றும் 170,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டாருக்கு காலை எழுந்தபின்னரே  திருடப்பட்ட சம்பவம் தெரியவந்ததுள்ளது. முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதற்கமைய சந்தேகத்தின் பேரில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த திருட்டு சம்பவம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் ஒருவர் கைது

திருகோணமலை (Trincomalee) – சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் ஆறாம்வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை, நேற்று (18.07.2024) சம்பூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 பியர் ரின்களும், இரண்டு சாராய போத்தல்களும் ஒரு கசிப்பு போத்தலும்  கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அந்த பெண் சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அனுமதி இல்லாத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை போன்ற இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு..!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது இன்று (19) வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ உளுந்து 1,400 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா 910 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 180 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 260 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கீறி சம்பா அரிசி 258 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..!

நாட்டிலுள்ள பலதரப்பட்ட பகுதிகளிலும் நோயாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமாக சிரத்தை எடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு நோயாளரை நாம் வைத்தியரிடம் அழைத்து செல்லும் போது கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியரை நாம் நம்புவது வழக்கம். அவ்வாறான வைத்தியர்கள் நோயாளர்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பதா அல்லது சேவை செய்வதா என்பது அவர்களுடைய மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விடயம். இந்தவகையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் கிருசாந்தி தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.அந்த குற்றச்சாட்டில், “எனது தந்தைக்கு கழுத்துப்பகுதியில் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த போது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். எனினும், அங்குள்ள வைத்தியர்கள் முறையான விதத்தில் எம்மோடு அணுகலில் ஈடுபடாது இழுத்தடிப்பு செய்தனர். இதனால் நாம் கொழும்பு மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில், சுமார் ஆறு மாதங்கள் எனது தந்தைக்கு அங்கு பரிசோதனைகள், கதிர்வீச்சு சிகிச்சை போன்றன அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 45 நாட்கள் எனது தந்தை மகரகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்ட பின்னர் கிளினிக்கிற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு வைத்தியர் கிருசாந்திக்கு மகரகம புற்றுநோய்ப்பிரிவு வைத்தியர் கடிதம் ஒன்று அனுப்பினார். இந்தநிலையில், நாம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு திரும்ப சென்றபோது ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறினர். மேலும் எனது தந்தைக்கு உணவு மாற்றும் குழாய் கூட அதிக காலம் மாற்றுப்படாமல் இருந்த நிலையில் நாம் மீண்டும் தொடர் கண்காணிப்புக்காக மகரகம வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு அரசியல்வாதியோ அல்லது முக்கிய பிரமுகர் ஒருவரோ வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்புக்காக இங்குள்ள வைத்தியரை நாடும் போது, நாம் மட்டும் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றோம்“ எனவும் பாதிக்கப்பட்டவரின் மகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானம் திறப்பு

பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட திறப்பு விழா இடம்பெற்றுள்ளது. இந்த மைதானத்தின் திறப்பு விழா நேற்று(18.07.2024) இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் “தேசிய அபிவிருத்தி பாதை” திட்டத்தின் கீழ் இந்த புதிய மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மைதானத்தை நிர்மாணிப்பதற்காக  இலங்கை கிரிக்கெட் மொத்தம் 170 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.