பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ஊருபொக்க பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 2,347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.