குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் குழப்ப நிலை.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதிவு இன்றி வந்தமையினால் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களும் இன்று முதல் குடிவரவு திணைக்களத்திற்கு வருவதற்கு முன் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு கட்டுப்பாட்டாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேகமாக பரவும் ‘சண்டிபுரா’ வைரஸ்: 4 வயது சிறுமி உட்பட 8 பேர் உயிரிழப்பு
இந்தியா, குஜராத் மாநிலம், சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தற்சமயம் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் நுளம்பு, மற்றும் சில பூச்சிகளின் மூலம் பரவுவதோடு, ஃபுளூ போன்ற அறிகுறிகளோடு காய்ச்சல் மற்றும் மூளை அழற்சியை ஏற்படுத்தும். சுமார் 44,000க்கும் அதிகமான மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 4 வயது சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் சண்டிபுரா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் ; அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை – வைத்தியர் அர்ச்சுனா
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன முற்றுப்புள்ளி வைத்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது. இதன் போது இராமநாதன் அர்ச்சுனா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. தென்மராட்சி மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்றைய திகதியிட்டு இன்றைய தினம் எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது. கொழும்பு சென்று நாளை அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என்றார்.
தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிற்கு விரைவில் தேர்தல்
தனது தலைவர் பதவியை கூட தியாகம் செய்து அனைத்து தெரிவுகளையும் யாப்பு விதியின் படி மூலக்கிளைகளிலிருந்து தெரிவு செய்வதில் தான் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sridharan) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாளை மறுதினம் திருகோணமலை மாவட்டத்தில் வருகின்ற வழக்கு ஆட்சேபனைகளை இணைக்கின்ற மறுமொழிகான நாளாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காலம் தாழ்த்தாத வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான அதிபர் தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற மர்ம மரணம் ; இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (18) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 54 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இந்த சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை
2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (17.07.2024) மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் மூவர் தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . அதில் 17 வயது பிரிவில் 59kg எடை பிரிவில் 70kg எடையை தூக்கி சூ.அனுஷா முதலாம் இடத்தையும், 64 kg எடை பிரிவில் 75kg எடையை தூக்கி க.வன்சிகா முதலாம் இடத்தையும், 81kg எடை பிரிவில் 84kg எடையை தூக்கி க.அபிசாளினி இரண்டாம் இடத்தையும், 20வயது பிரிவில் 49kg எடை பிரிவில் 80kg எடையை தூக்கி பி.மேரி அசெம்ரா முதலாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் , மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பளுதூக்கல் போட்டிக்கான மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவன் ஆசிரியர், நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர் செ. அம்பிகா, மற்றும் மாணவர்களுக்கு பொறுப்பாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ந. ரூபராஜா ஆகியோரின் தியாகமும் உழைப்பும் இன்றியமையாததாகும். இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் செய்யாததை ஆசிரியர்கள் செய்கின்றனர் – மனுச நாணயக்கார தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்துகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்குக் குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது அவர்களது பலம் எனக் கருதுகின்றனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பாடசாலைகளை மூடுவதற்கு இடமளிக்கவில்லை. ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை மாற்றி, பாடசாலைக்குச் செல்லாத தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியல் நலனுக்காக அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கட்சி நிற வேறுபாடின்றி ஒரே அரசாங்கத்தில் இணைத்துள்ளோம். இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு.
ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சில அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ள ஜப்பான்
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகக் கிழக்கு இறங்குதுறை மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் ஆகிய அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை – மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று (19) பிற்பகல் 1 மணிவரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு உயரும் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடிய நிலை ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.