நாட்டிலுள்ள பலதரப்பட்ட பகுதிகளிலும் நோயாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமாக சிரத்தை எடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு நோயாளரை நாம் வைத்தியரிடம் அழைத்து செல்லும் போது கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியரை நாம் நம்புவது வழக்கம். அவ்வாறான வைத்தியர்கள் நோயாளர்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பதா அல்லது சேவை செய்வதா என்பது அவர்களுடைய மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விடயம்.
இந்தவகையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் கிருசாந்தி தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.அந்த குற்றச்சாட்டில், “எனது தந்தைக்கு கழுத்துப்பகுதியில் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த போது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.
எனினும், அங்குள்ள வைத்தியர்கள் முறையான விதத்தில் எம்மோடு அணுகலில் ஈடுபடாது இழுத்தடிப்பு செய்தனர். இதனால் நாம் கொழும்பு மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.
அந்தவகையில், சுமார் ஆறு மாதங்கள் எனது தந்தைக்கு அங்கு பரிசோதனைகள், கதிர்வீச்சு சிகிச்சை போன்றன அளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 45 நாட்கள் எனது தந்தை மகரகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்ட பின்னர் கிளினிக்கிற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு வைத்தியர் கிருசாந்திக்கு மகரகம புற்றுநோய்ப்பிரிவு வைத்தியர் கடிதம் ஒன்று அனுப்பினார்.
இந்தநிலையில், நாம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு திரும்ப சென்றபோது ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறினர்.
மேலும் எனது தந்தைக்கு உணவு மாற்றும் குழாய் கூட அதிக காலம் மாற்றுப்படாமல் இருந்த நிலையில் நாம் மீண்டும் தொடர் கண்காணிப்புக்காக மகரகம வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி ஏற்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் ஒரு அரசியல்வாதியோ அல்லது முக்கிய பிரமுகர் ஒருவரோ வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்புக்காக இங்குள்ள வைத்தியரை நாடும் போது, நாம் மட்டும் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றோம்“ எனவும் பாதிக்கப்பட்டவரின் மகன் கேள்வியெழுப்பியுள்ளார்.