Search
Close this search box.

கைதிகளுக்கும் வாக்களிக்க வாய்ப்பு – உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறு, அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது. விளக்கமறியலில் உள்ள ஒருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 9 பேர்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குத் தேர்தல்களில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய மனுதாரர், அவர்கள் தமது ஜனநாயக உரிமையை இழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் தொடரும் குழப்பம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதேவேளை பொதுஜன பெரமுனவினால், ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்வைத்தால் அதுபற்றி பரிசீலிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், தாம் எந்த வகையிலும் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ம் திகதியுடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம் ஆகும், அதில் 18 இலட்சம் பேர் அஸ்வெசுமவின் பலன்களுக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி: ஆபத்தை எதிர்கொள்ளும் கடல் பாலூட்டிகள்?

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால்  இலங்கையின் கடற்பகுதிகளைச் சுற்றி உள்ள ஆமைகள் மற்றும்  டொல்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகள் இறக்கின்றன என வனவிலங்கு திணைக்களம் அறிவித்துள்ளது.  மீன்பிடிக்க சட்ட விரோதமான (Bottom trawling) பொட்டம் டிராலிங் முறையை கடைபிடிப்பதால் கடல் பாலூட்டிகள் உட்பட அனைத்து மீன்களும் கொல்லப்படுகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியில் ஒரு வாரத்திற்குள் இறந்த நிலையில் 10 ஆமைகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வனவிலங்கு கால்நடை  மருத்துவர்களால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சுவாசிப்பதில் சிரமம், காயங்கள் மற்றும் ஃபிலிப்பர்கள் சேதமடைந்ததால், இந்த ஆமைகள் இறந்தது தெரியவந்துள்ளது.  மேலும் இறந்த சில ஆமைகள் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்ததால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் ஆமைகளை காயப்படுத்துவது மற்றும் கொல்வது மட்டுமல்லாமல், டொல்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்கும் தீங்கு விளைவதாக குறித்த திணைக்களம் கூறியுள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் கடல் பாலூட்டிகளைப் பாதுகாப்பதற்காகன முக்கியத்துவம் குறித்தும்   திணைக்களம் பொதுமக்களிடம் ஏற்கனவே பல முறை எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லயன்களைக் கிராமங்களாக்கும் திட்டத்துக்கு திகாம்பரம் எம்.பி எதிர்ப்பு..!

மலையக பகுதியில் தற்போது இருக்கின்ற லயன்களை கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்ற நிலையில் இதற்கு  நாம் உடன்பட முடியாது என்பதுடன் மக்களும் உடன்படமாட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட குடியிருப்பு பகுதியைக் கிராமங்களாக அறிவிக்கும் திட்டம் பற்றியே பேச்சு நடத்த வந்திருந்தோம். நல்லாட்சியின் போது நான் அமைச்சராக இருந்தேன். தனி வீடுகள் அமைக்கப்பட்டே காணி உரித்துடன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இவர்கள் லயன்களைக் கிராமங்களாக்கப் பார்க்கின்றனர். இதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவாகக் குறிப்பிட்டோம். எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டு, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டே கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். காணி உரிமைக்கான எமது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்தான் இருக்கின்றோம். ஜனாதிபதியுடனான சந்திப்பில் தேர்தல் பற்றி பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

திருமணம் செய்து இஸ்ரேலுக்கு செல்லவிருந்த இளம் தாதி எடுத்த விபரீத முடிவு

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணிபுரிந்த யுவதியொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக ரக்வான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹவத்த – அந்தண கிராம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரக்வான அலுத்கெல்ல பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த யுவதியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், மூன்று சகோதரர்கள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தான் திருமணம் செய்யவிருந்த நபருடன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாட்டி பொலிஸில் தெரிவித்துள்ளார். இதேவேளை, யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பஹ்வவத்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பிரேத பரிசோதனை நேற்று  வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

நாட்டிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்..!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 1300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம்(17) விஜயம்  மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது இலங்கையில் 24,000 பேர் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். வெகுவிரைவில் 3500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் 3000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றனர். இதனால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக்கூடியதாக இருக்கின்றது. தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர். எனினும் தற்பொழுது துறைசார்ந்த  வைத்திய நிபுணர்கள் நட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது. துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10-15 வரையிலான வைத்தியர்கள் நாட்டிற்கு மீளவும் வருகைதந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது என்றார்.

தேர்தலுக்கான நிதி வழங்கள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.  மேலும் வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் எந்த வகையான தேர்தல்கள் நடந்தாலும்  அதற்கான  செலவீனமாக 10பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அரசாங்கம் கடுமையான நிதி  நெருக்கடியில் உள்ளபோதும்  தேர்தலுக்கு நிதி வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தேர்தலுக்கு நிதி வழங்குவது தொடர்பில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி   ‘நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிவாரணங்களுக்காக அரசாங்கம் பல பில்லியன் ரூபாவை செலவு செய்து வருகிறது. அதனால், தேர்தலுக்கு நிதிச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி தற்போது வரையில், பாராளுமன்றத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நிதி இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தேர்தல் ஆணைக்குழு கேள்வி எழுப்புவதற்கான எந்த அவசியமும் இல்லை’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் புதிய மாற்றம்! வெளியான அறிவிப்பு…

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யப்பட வேண்டும். ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்தில் மாயமானவர்களில் 09 பேர் மீட்பு

அரபிக்கடலில் எரிபொருள் கப்பல் விபத்திற்குள்ளாகிய பின்னர் அதன் பணியாளர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. குறித்த கப்பலில் 16 பணியாளர்கள் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள் எனவும் ஏனைய மூவர் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமனின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் இந்த எரிபொருள் கப்பல் கவிழ்ந்துள்ளது.