எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் எந்த வகையான தேர்தல்கள் நடந்தாலும் அதற்கான செலவீனமாக 10பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோதும் தேர்தலுக்கு நிதி வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தலுக்கு நிதி வழங்குவது தொடர்பில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ‘நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிவாரணங்களுக்காக அரசாங்கம் பல பில்லியன் ரூபாவை செலவு செய்து வருகிறது. அதனால், தேர்தலுக்கு நிதிச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி தற்போது வரையில், பாராளுமன்றத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நிதி இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தேர்தல் ஆணைக்குழு கேள்வி எழுப்புவதற்கான எந்த அவசியமும் இல்லை’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.