சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இலங்கையின் கடற்பகுதிகளைச் சுற்றி உள்ள ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகள் இறக்கின்றன என வனவிலங்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
மீன்பிடிக்க சட்ட விரோதமான (Bottom trawling) பொட்டம் டிராலிங் முறையை கடைபிடிப்பதால் கடல் பாலூட்டிகள் உட்பட அனைத்து மீன்களும் கொல்லப்படுகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியில் ஒரு வாரத்திற்குள் இறந்த நிலையில் 10 ஆமைகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வனவிலங்கு கால்நடை மருத்துவர்களால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சுவாசிப்பதில் சிரமம், காயங்கள் மற்றும் ஃபிலிப்பர்கள் சேதமடைந்ததால், இந்த ஆமைகள் இறந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இறந்த சில ஆமைகள் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்ததால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் ஆமைகளை காயப்படுத்துவது மற்றும் கொல்வது மட்டுமல்லாமல், டொல்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்கும் தீங்கு விளைவதாக குறித்த திணைக்களம் கூறியுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் கடல் பாலூட்டிகளைப் பாதுகாப்பதற்காகன முக்கியத்துவம் குறித்தும் திணைக்களம் பொதுமக்களிடம் ஏற்கனவே பல முறை எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.