Search
Close this search box.

காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய இளைஞன் கயிறு இறுகி மரணம்: வவுனியாவில் துயரம்

வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்குப் பயம் காட்டக் கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரைக் காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் ஞாயி்ற்றுக்கிழமை (30) தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார். தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காகக் கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் குறித்த கயிறு இறுகி மரணித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாமடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் 25 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 25 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான 25 இந்திய மீனவர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு…! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்த  நபர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரான 43 வயதுடைய சரவணபவானந்தன் சிவகுமார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் தீக்காயத்திற்க்கு உள்ளானது தொடர்பான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கொழும்பிலிருந்து அதிக பயணிகளுடன் சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்..!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சில பயணிகள் கண்ணாடி துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலை பொருட்படுத்தாமல் ரயில் தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

டுபாயிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக்கும்பல்.

கேகாலை – பமுனுகம பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரை இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரி அச்சுறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கடுவெல முத்து விடுத்த அச்சுறுத்தலை அடுத்து அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உஸ்வதகேயாவ பமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் வங்கிக் கணக்கில் 650,000 ரூபா பணத்தினை கப்பட் கோரப்பட்ட பணத்தின் முற்பணமாக வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி லக்கல பொலிஸில் வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​கடுவெல முத்து மாணிக்கக்கல் வியாபாரிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதுடன், கப்பம் தொகையை பமுனுகமவில் வசிக்கும் தனது உதவியாளர் வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கோரியுள்ளார். குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு டுபாய் சென்று கடுவெல முத்துவுடன் ஒன்றாக வாழ்ந்து 2023 ஆம் ஆண்டு இறுதியில்  இலங்கை திரும்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது. மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, லக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தம்மிக்க பத்மராஜா, குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் சமிந்த, உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ, பொலிஸ் சார்ஜன்ட்கள் (14751) குமாரசிங்க, (21662) ரஞ்சித், பொலிஸ் கான்ஸ்டபிள் (87 பொலிஸ் கான்ஸ்டபிள்) ஆகியோர் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, டுபாயில் வசிக்கும் பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பதிவு தொடர்பில் வெளியான தகவல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 சதவீதமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிந்து கொள்வதில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி பி. சத்தியபவான் தெரிவித்தார். மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (30.06.2024) மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் சமாதான செயற்பாட்டாளர்கள், மதப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்நிகழ்வில் தேர்தல் கால செயற்பாடுகள் சம்பந்தமாக தொடர்ந்து தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி சத்தியபவான், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 10 சதவீதமான வாக்காளர்கள் தங்களைப் பதிந்து கொள்ளாத நிலைமைகள் காணப்படுகின்றன. கவனயீனம், தவறு அல்லது குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்று விடுகின்றது. எனவே, இந்த விடயத்தில் மக்களுக்காக மக்களோடு சேர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் மாவட்ட சர்வமத செயற்குழு போன்ற அமைப்புக்கள் இது விடயமாக மக்களுக்கு தெளிவான விளக்கங்களைக் வழங்குவதன் மூலம் இனிவரும் காலங்களில் விடுபட்டுப்போன குடியிருப்பாளர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.” என்றார். இதன்போது மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர். இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ரேவதன், விளையாட்டு உத்தியோகத்தரும் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான கே. சங்கீதா, கூட்டுறவுத் திணைக்கள கணக்குப் பரிசோதகர் எம்.ஐ.எம். உசனார், தொழுநோய் சம்பந்தமான கிழக்கு மாகாண சமூகப் பணி வளவாளரும் இணைப்பாளருமான அருட்பணி ஏ.எஸ். ரூபன் உட்பட இன்னும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு.

போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ் பிரிவு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இந்த அறிக்கையை தயாரிப்பது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் குறிக்கோள், அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடிய சந்தையை உடைப்பதும் ஆகும். கடந்த ஆறு மாதங்களில், ஒன்பது மாகாணங்களில் ‘யுக்திய’ நடவடிக்கைகளின் மூலம் 184,862 போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 5565 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

கனடா, அமைதியான இலங்கையை காண விரும்புகிறது : எரிக் வோல்ஷ் தெரிவிப்பு.

கனடா, அமைதியான வளமான மற்றும் நல்லிணக்கமான இலங்கையை காண விரும்புகிறது என  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ( Eric Walsh) தெரிவித்துள்ளார். ஜூலை 1, கொண்டாடப்படும் கனடா தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கனடாவின் சர்வதேச உதவியானது பெண்கள் மற்றும் சிறுமிகளை மேம்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய காலநிலைக்கு ஏற்ற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் மோதலுக்குப் பின்னரான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்குமான,  இலங்கையின் முயற்சிகளுக்கு வழங்கப்படுகிறது என்று எரிக் வோல்ஷ் கூறியுள்ளார். முழுமையான பொருளாதார மீட்சியை முன்னெடுத்துச் செல்லும் இலங்கையுடன் கனடா தொடர்ந்து நிற்கிறது என்று அவர் கூறியுள்ளார். கனடா கூட்டமைப்பின் 157வது ஆண்டு நிறைவை, பிரமிக்க வைக்கும் புவியியல் அம்சங்கள் மற்றும் ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட நாட்டில் கொண்டாடுகிறோம். அங்கு சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தனிநபர்களுக்கும் மரியாதை ஆகியவை ஆழமாக மதிக்கப்படுகின்றன. மேலும் கனடா, ஒரு நீண்ட ஜனநாயக பாரம்பரியம், இரண்டு உத்தியோகபூர்வ மொழிகள், வளமான பன்முக கலாசார சமூகம்,  பழங்குடி மக்களுடன் நல்லிணக்கத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதுவே, உலகெங்கிலும் உள்ள மக்களை கனடாவிற்கு ஈர்க்கும் ஒரு பெரிய பகுதியாகும் என்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.  

ரணிலுக்கு பொதுஜன பெரமுன முழு ஆதரவு..! – அமைச்சர் காஞ்சன அறிவிப்பு.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதே எமது கட்சியின் அபிலாஷை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரினதும் அபிலாஷை ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதேயாகும், மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் அதற்கு ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! ஹிருணிகாவால் கடத்தப்பட்ட இளைஞர் வெளியிட்ட தகவல்..

இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெமட்டகொடையில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அமில பிரியங்கர என்ற இளைஞர் கடத்திச்செல்லப்பட்டு குடும்பத்தகராறைத் தீர்க்கும் முயற்சியில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர இது தொடர்பில் கூறுகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. நான் நான்கு முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது எனக்கு ஓரளவு நிவாரணமாக இருந்திருக்கும். இச்சம்பவத்தினால் தனது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஹிருணிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சட்டத்தை மதித்து சிறைச்சாலையில் காலத்தை கழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு வசதிகள் எதையும் அவர் கோரவில்லை என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட போது, ​​பெண் கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த ஹிருணிகா, பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டார். ஹிருணிகா அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பெண் கைதிகளுடன் தனது நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கு அவரிடமிருந்து எந்த இடையூறும் இல்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை ஹிருணிகா பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மருத்துவ அறிக்கை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அரசியல் பிரதிநிதிகள் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.