மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு
மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வானிலை குறித்து 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, அரபிக் கடல் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவநிலை தீவிரமாக இருப்பதால் அரபிக் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று இடைக்கிடையில் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்..
17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (30) மாலை கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச் சென்ற சிலரில் மூன்று பேர் அலையில் சிக்கி அடித்துச் சென்றனர். அப்போது உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், 2 பேரை மீட்டனர். ஆனால் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கல்கிஸ்ஸை அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..
கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 91ஆவது வயதில் காலமானார்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.