யாழில் பாரிய பணமோசடி: மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண் கைது
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில், யாழ். மானிப்பாய் (Manipay) பகுதியை சேர்ந்த குறித்த பெண் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனடிப்படையில், காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
சம்பந்தனின் வெற்றிடத்துக்கு நிரப்பவுள்ள புதிய உறுப்பினர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கதிரவேல் சண்முகம் நிரப்பவுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை கதிரவேல் சண்முகம் நிரப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட 400 மருத்துவ நிபுணர்கள் வெளியேறியுள்ளனர். இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு தெரிவுகள் இன்மையால், சுகாதார அமைச்சகம் இறுக்கமான இடத்தில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் கிட்டத்தட்ட 5,000 இலங்கை வைத்தியர்கள், வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான தகுதிபெறும் பரீட்சைகளில் சித்தியடைந்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, இது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் பயிற்சிக்கான பரீட்சையில் தோற்றிய 3500 வெளிநாட்டு மருத்துவர்களில் 750 பேர் இலங்கையர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த பரீட்சையில் சித்தியடைந்த 2100 பேரில் 550 பேர் இலங்கையர்கள் என்ற பிந்திக்கிடைத்த தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர்.
சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்திருந்த இலங்கைப் பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike) கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்று (30.06.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைதானவர் 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் சம்பந்தனுக்கு அஞ்சலி
மறைந்த தமிழ் தேசிய தலைமகனாக போற்றப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு (R.Sampanthan) அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (01) தமிழரசுக்கட்சின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் அஞ்சலி பதாகையும் கட்டப்பட்டது.
வரலாற்றை மாற்றுமா பிரான்ஸ் தேர்தல்?
நடைபெற்று முடிந்த முதலாவது சுற்று தேர்தலில் தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை வெற்றியை பெற்றிருந்தமை அறிந்ததே. ஐந்தாம் குடியரசில் முதன்முறையாக இந்த வலதுசாரிகளின் பெரும்பான்மை பதிவாகியுள்ளது. வலதுசாரி சிந்தனை பிரெஞ்சு மக்களிடம் பெருவாரியாக தோன்றியமைக்குரிய காரணம் குறித்து அலசுகிறது இந்த பதிவு. ’பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கே!’ என்பது வலதுசாரிகளின் முக்கிய கொள்கையாகும். ஆனால், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குடியேற்றத்தை ஆதரிப்பவர் ஆவார். நாட்டில் பதிவாகும் அனைத்து வன்முறைகளுக்கும் இந்த குடியேற்றமே காரணமாகும் என நம்பும் பெரும்பான்மையான மக்கள், இந்த சிந்தனைக்கு எதிராக திரண்டு வந்து வாக்குகளை அளித்துள்ளனர். Rassemblement National கட்சி சென்ற 2022 ஆம் ஆண்டு தேர்தலில் 4.2 மில்லியன் வாக்குகள் பெற்ற நிலையில், இம்முறை 12 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான வாக்குப்பதிவாகும். இதனை ‘குடியேற்ற’ சிந்தனைக்கு எதிரான மாற்றமாக கருத முடியும். அதேவேளை, ஐந்தாம் குடியரசில் இரண்டாவது தடவையாக அதிகூடிய வாக்குப்பதிவுகள் ( 67.5%) இம்முறை பதிவாகியுள்ளது. இதன் பின்னணியில் மக்களிடையே வலதுசாரி சிந்தனை மேலோங்கியுள்ளதைக் காணமுடிகிறது. பிரான்சில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுகள், போதைப்பொருள் கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்களை அரசு கட்டுப்படுத்த தவறியதாக மரீன் லு பென் தொடர்ச்சியாக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மக்ரோனின் மீதான வெறுப்பை கொண்டுள்ள மக்கள், ஜனாதிபதியின் மறுமலர்சி கட்சியை மூன்றாவது இடத்துக்கு தள்ளி (22% வாக்குகள்) இடதுசாரி கூட்டணியான Nouveau Front Populaire இற்கு 29% சதவீத வாக்குகளையும் வழங்கியுள்ளது. பிரான்சில் மட்டுமில்லாது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்குமே வலதுசாரி சிந்தனை எழுந்துள்ளதாக பல்வேறு அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் சம்பந்தன் எனும் தவிர்க்க முடியாத ஆளுமை
ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமை தனது 91ஆவது வயதில் இன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) ஐயா அவர்கள். உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று இயற்கை எய்தினார். சுதந்திரத்திற்கு பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றிலும், உரிமை கோரிய ஈழ விடுதலைப் போராட்ட காலம் மற்றும் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலத்திலும் ஈழத் தமிழ் மக்களிடத்தினின்றும் அவர் சார் அரசியலினின்றும் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக சம்பந்தன் அவர்கள் இருந்திருக்கின்றார். விமர்சனங்களுக்கு அப்பால் தன்னுடைய காலத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மாத்திரமின்றி இறுதிவரை அதே கொள்கையில் உறுதியாகவும் நின்று மடிந்து போயிருக்கின்றார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தவர் சம்பந்தன். யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை தொடர்ந்த இவர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானவர். 1972ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்து பின்னர் 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவெடுத்த கட்சியின் ஊடாக 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 15,144 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் சம்பந்தன். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனையடுத்து 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தனால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் போனது. இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம், அவர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட ஏழு சந்தர்ப்பங்களிலும் ஒரே ஒரு முறை மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கின்றார். இதேபோல, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், அந்த கூட்டமைப்புக்கு சம்பந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு 18 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பின்னர், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களின் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்ட சம்பந்தன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இவற்றுள், 2015ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தன் செயற்பட்டு வந்துள்ளார். இதற்கு முன்னர், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விலகியிருந்தார். அத்தோடு, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது. இந்த சமயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னரான தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், உடல்நலக் குறைவு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட பல அரசியல்சார் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது குறைவாக இருந்த போதும், தமிழர் சார் அரசியல் நகர்வுகளை பழைய உத்வேகத்துடனேயே முன்னெடுத்து வந்தார். குறிப்பாக, தற்போதைய அரசியல் பரப்பில் இருக்கக் கூடிய மூத்த அரசியல் தலைவர்களான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூத்த தலைவர்களாக இருக்கட்டும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அனைவருக்குமே சம்பந்தன் மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது. இதற்கு சம்பந்தனுடைய ஆளுமையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இலங்கை, தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்ளூர் மாத்திரமின்றி சர்வதேச தலைவர்களையும் சந்தித்து தமது அழுத்தங்களை கொடுப்பதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் சம்பந்தன் எப்போதுமே சோர்வு காட்டியதில்லை. குறிப்பாக, நாடாளுமன்றத்திற்குள் இடம்பெறும் வாத விவாதங்களின் போதும், தமிழர்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழர்களை தூற்றும் விதமாகவோ, கீழ்நிலைப்படுத்தியோ சிங்கள அரசியல்வாதிகள் கூச்சலிடும் போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து சம்பந்தன் ஆற்றும் உரை பலரிடத்தில் வரவேற்பை பெற்ற ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கின்றது இவைகளைக் கடந்து தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது பல தசாப்தங்களாக கேள்விக் குறியாகவே இருக்கும் நிலையில், தன்னுடைய காலத்தில் ஏதாவதொரு விடயத்தை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவே செயற்பட்டிருந்தார். நாடாளுமன்றத்திற்கு உள்ளிருந்து தமிழர் உரிமைக்காக சம்பந்தன் குரல் கொடுத்து வந்த போதிலும், உரிமை கோரிய ஆயுத போராட்டக் காலத்தில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக் காலத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சம்பந்தன் செயற்பட்டிருக்கவில்லை என வரலாறு கூறுகிறது.. குறிப்பாக, அந்த காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய அமைப்புக்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ தமிழர் அரசியலில் எவ்விதமான தீர்மானிக்கும் இடமும் இருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்தான் சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றிருக்கின்றார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சம்பந்தன் என்றுமே சளைத்துப் போய்விடவிலலை. அவர் முன்னால் அடுத்த தமிழர் தலைமுறை நிம்மதிப் பெருமூச்சு விட தேவையான பாதையை அமைக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, தன்னுடைய காலத்தில் ஒரு சரியான அடித்தளத்தை இடுவதற்கான தற்துணிவும் ஆற்றலும் உள்ள தலைமைத்துவம் அவரிடம் இருந்தமை மறுக்க முடியாத ஒன்று… அவரது இழப்பும் ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது..
மும்பை சோகம்: 4 குழந்தைகள் உட்பட 5 பேர் அணையில் மூழ்கி உயிரிழப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள பூஷி அணைக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் என ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் நேரத்தில் நடைபெற்றுள்ளது. இதில் புனேவைச் சேர்ந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் பூஷி அணைக்கு பார்வையாளர்கள் வருவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவின் ஹதப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கானின் குடும்பத்தினர் 18 பேர் பூஷி அணைக்கு வந்துள்ளனர். அணையின் பின்புறம் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அதில் 10 பேர் சிக்கி தவித்துள்ளனர். அதிலிருந்து 5 பேர் தப்பிய நிலையில் 5 பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள் ஐவரும் மாயமாகினர். இதனைக் கண்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உள்ளூர் பகுதியை சேர்ந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் மூவரின் உடல் மீட்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 40 வயது பெண் ஒருவர் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுவனின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. லோனாவாலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சுமார் 163 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழைக் காலம் என்பதால் நீர்வீழ்ச்சிக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பூசாரி உட்பட 5 பேர் கைது!
ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிகையில் ஈடுபட்ட போது புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பகுதியிலிருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்பு.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் சனிக்கிழமை (29) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையிலிருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு செவன்ற பொலிசார் அச் சடலத்தை மீட்டனர். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தர். வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் வவுனியா பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்