கனடா, அமைதியான வளமான மற்றும் நல்லிணக்கமான இலங்கையை காண விரும்புகிறது என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ( Eric Walsh) தெரிவித்துள்ளார்.
ஜூலை 1, கொண்டாடப்படும் கனடா தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவின் சர்வதேச உதவியானது பெண்கள் மற்றும் சிறுமிகளை மேம்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய காலநிலைக்கு ஏற்ற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் மோதலுக்குப் பின்னரான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்குமான, இலங்கையின் முயற்சிகளுக்கு வழங்கப்படுகிறது என்று எரிக் வோல்ஷ் கூறியுள்ளார்.
முழுமையான பொருளாதார மீட்சியை முன்னெடுத்துச் செல்லும் இலங்கையுடன் கனடா தொடர்ந்து நிற்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
கனடா கூட்டமைப்பின் 157வது ஆண்டு நிறைவை, பிரமிக்க வைக்கும் புவியியல் அம்சங்கள் மற்றும் ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட நாட்டில் கொண்டாடுகிறோம்.
அங்கு சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தனிநபர்களுக்கும் மரியாதை ஆகியவை ஆழமாக மதிக்கப்படுகின்றன.
மேலும் கனடா, ஒரு நீண்ட ஜனநாயக பாரம்பரியம், இரண்டு உத்தியோகபூர்வ மொழிகள், வளமான பன்முக கலாசார சமூகம், பழங்குடி மக்களுடன் நல்லிணக்கத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதுவே, உலகெங்கிலும் உள்ள மக்களை கனடாவிற்கு ஈர்க்கும் ஒரு பெரிய பகுதியாகும் என்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.