இலங்கையில் இருந்து தப்பியோடிய முக்கிய நபர்கள் : விசாரணையில் சிக்கிய அரச அதிகாரி
சீதாவக்க பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதாள உலக குழுவினர் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்காக போலி பிறப்புச் சான்றிதழ்களை வழங்கியமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் விசாரணையை அடுத்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். சீதாவக்க பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் பணத்திற்காக போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்குவதாக பல முறைப்பாடுகள் வந்ததையடுத்து அரச நிர்வாக அமைச்சு அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணையில், இந்த பதிவாளர் சில மணி நேரத்திலேயே போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. பல போலி பிறப்புச் சான்றிதழ்களில் அதனை பெற்றுக் கொள்ளும் நபர்களின் பிறந்த இடம் ஹங்வெல்ல வைத்தியசாலை என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த போலி பிறப்பு சான்றிதழ் வர்த்தகத்தில் ஹங்வெல்ல வைத்தியசாலையின் பல ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், போலி பிறப்புச் சான்றிதழை பெற முயற்சிக்கும் நபர்கள் ஹங்வெல்ல வைத்தியசாலையில் பிறந்தவர் என்ற ஒரு சீட்டு துண்டை மேலதிக பதிவாளரிடம் வழங்கியதன் பின்னர் உடனடியாக போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்ப்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர்!
சீனாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங் இன்று (28) பீஜிங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். மஹிந்த ராஜபக்ஷவை ‘சீனாவின் பழைய நண்பர்’ என்று அழைத்த துணை அமைச்சர், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை நினைவு கூர்ந்தார். இலங்கையும் சீனாவும் பெல்ட் அன்ட் ரோடு முன்முயற்சியில் (பிஆர்ஐ) மிகச் சிறந்த பங்காளிகளாக இருப்பதாகவும், சீனாவின் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சீனா தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் துணை அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தியில் சீனாவின் உறுதியான ஆதரவைப் பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி, எதிர்காலத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பைக் கோரினார். அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் பீஜிங்கிற்குச் சென்றுள்ளார்.
தேர்தலுக்காக ரணில் புனை கதைகளை கூறுகின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக போட்டியிடும் கனவுடன் பொய்களுடனும் புனை கதைகளுடனும் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தனது உரையில் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உவரி நிதி கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். 1977 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை உள்நாட்டிலே இனப் பிரச்சினையினால் ஏற்பட்ட யுத்தத்திற்காக சுமார் 250 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதை சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். தற்போது இலங்கைக்கு 5500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கியதையும் ஒத்துக் கொண்டிருக்கின்றார். 16 தடவைகள் சர்வதேச நாணயத்திடம் வாங்கிய கடனில் அபிவிருத்தி வேலைப்பாடுகளில் தோல்வி அடைந்ததையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார். மக்கள் வரிசையில் நின்ற யுகத்திற்கு தான் முடிவு கட்டியுள்ளதாக மார் தட்டும் ரணில் விக்ரமசிங்க மக்கள் தலைமீது கடன் சுமையை சுமத்தியுள்ளமையை அறியாதவர் போல் கருத்து வெளியிடுகிறார். ஐ.நா. கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் 60 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 70 வீதமாக இருந்த பண வீக்கத்தை 9 வீதமாக குறைத்துள்ளேன் எனத் தெரிவிப்பது வேடிக்கையான விடயம். இலங்கையில் பண வீக்கம் குறைந்தால் பொருட்களின் விலை குறைய வேண்டும் ஆனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். இலங்கை உலக நாடுகளிடம் வாங்கிய கடன் 97 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படும் நிலையில் அதனை 2028 தொடக்கம் 2043 ஆம் ஆண்டு வரை செலுத்துவதற்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்த சாதனையா? கடனை கட்டும் கால நீடிப்பைக் கூட்டி மக்களின் தலையில் வரியை செலுத்தும் கைங்கரியத்தை ஜனாதிபதி செய்துள்ளார். மக்கள் மீது கடன் சுமையை சுமத்தி விட்டு தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாவிட்டால் மக்கள் இருண்டயுகத்துக்குச் செல்ல நேரிடும் அல்லது மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டுமென மிரட்டும் பேச்சுக்களாக அவரது உரை காணப்படுகிறது. கடன் வாங்கும் நபராக ரணில் விக்ரமசிங்கவும் கடனை வட்டியுடன் செலுத்தும் நபர்களாக இந்த நாட்டு மக்களும் காணப்படுகிறார்கள். இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமானால் வெறுமனே கடன் வாங்குவதால் மட்டும் முன்னேற்றி விட முடியாது. வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் முதலிடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும். புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அழைப்பதற்கு இலங்கையில் நீடித்து நிற்கும் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுகளை முன்வைக்காமல் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியாது. சுமார் 1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு லீவு வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் நாட்டில் பல பட்டதாரிகள் வேலையில்லாமல் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் லீவு வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பும் அரச உத்தியோகத்தர்களின் பணத்தை மீதப்படுத்த எண்ணுகிறது. உண்மையில் ஜனாதிபதி கூறுவது போன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்திருக்குமானால் ஏன் சம்பள அதிகரிப்பு கோரி அரச உத்தியோகத்தர்கள் போராட்டம் நடத்த வேண்டும். ஆகவே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதியின் குறித்த உரையானது தேர்தலை இலக்காகக் கொண்டு பொய்களையும் புனை கதைகளையும் கொண்ட உரையாகவே பார்க்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லியில் இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை: ஒருவர் பலி.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 1இல் உள்ள மேற்கூரையே இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழையின் காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய புறப்பாடு முனையத்தில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. டெல்லியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தீவிரமான மழை தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழை காரணமாக குறித்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலையில் வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது.
திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பஸ்ஸர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36 முதல் 50 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் விவகாரத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் நடத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தகாத செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா (US) குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில், கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கடத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், சிறுவர்களை தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரச சிறுவர் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த முடிவுகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது. அத்துடன், 2021ஆம் ஆண்டில், 15 வயது சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில், இலங்கையின் சட்டமா அதிபர், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிவிட்டார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கு, சிறுவர்கள் கடத்தல் மற்றும் தகாத செயற்பாடுகள் தொடர்பில் 36 முறைப்பாடுகளே கிடைத்துள்ளன. எனினும், பொலிஸாரின் தகவல்படி 128 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் சுமார் 331 சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை நடத்துகிறது. அவை கடத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு சேவைகளை வழங்குகின்றன எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரெய்ன் போர்: இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழப்பு.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையில் போர் நடந்து வருகின்றது. இதில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தத்தமது இராணுவப் படையின் பலத்தை அதிகரிப்பதற்காக இரு நாடுகளுமே வெளிநாடுகளிலிருந்து தமது இராணுவத்துக்கு ஆட்களை இணைத்து வருகிறது. அதிலும் ரஷ்யா, நல்ல சம்பளம், பாதுகாப்பு, உதவியாளர் பணி என பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி இராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது. அவ்வாறு சேர்க்கப்படுபவர்களுக்கு வலுக்கட்டாயமாக இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் விருப்பம் இல்லாமாலே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் உக்ரெய்னின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் செத்து மடிவது தொடர் கதையாகிவிட்டது. இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களும் ரஷ்ய இராணுவப் படையில் சேர்கின்றமை தொடர்பில் ஏகப்பட்ட விவாதங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யா – உக்ரெய்ன் போரில் இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இலங்கை ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அபாயத்துக்கு சாத்தியம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை: பூமியை நெருங்கும் சிறுகோள்.
2011 UL21’என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த சிறுகோள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். 1.1 விட்டம் மற்றும் 2.4மைல் வரையில் இருக்கும். இது பூமியின் அருகிலிருக்கும் ஏனைய சிறுகோள்களைப் பார்க்கிலும் அளவில் சற்று பெரியது. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருந்த சிறுகோளைப் பார்க்கிலும் இது 5 மடங்கு சிறியது. அளவில் சிறிதாக இருந்தாலுமே இது பாரியளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அபாயத்துக்கு சாத்தியமானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள், காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் விண்வெளியில் குப்பைகளை வெளியிடும் அளவுக்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள கூறுகின்றனர்.
யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கார் – வெளியான தகவல்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறான நிலையில் நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார். அதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம் வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , வைத்தியசாலை ஊழியர்கள் , காரின் சாரதியை தேடி உள்ளனர். நீண்ட நேரமாகியும் காரின் சாரதி அவ்விடத்திற்கு வராதமையால் , வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து , விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அயலில் உள்ள கடைகளில் விசாரித்த போதிலும் காரின் சாரதியை கண்டறிய முடியாததால் , காரினை அவ்விடத்தில் இருந்து கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு , பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க தகட்டின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள்: யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் கோரிக்கை
நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். விசர் நாய் கடி தொடர்பாக நேற்று (27.6.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விசக் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது. ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை, விசர்நாய்க் கடிக்கு இலக்கான சிறுமியொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி (Kilinochchi) – குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.