Search
Close this search box.
தேர்தலுக்காக ரணில் புனை கதைகளை கூறுகின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக போட்டியிடும் கனவுடன் பொய்களுடனும் புனை கதைகளுடனும் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி தனது உரையில் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உவரி நிதி கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். 1977 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை உள்நாட்டிலே இனப் பிரச்சினையினால் ஏற்பட்ட யுத்தத்திற்காக சுமார் 250 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதை சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

தற்போது இலங்கைக்கு 5500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கியதையும் ஒத்துக் கொண்டிருக்கின்றார்.

16 தடவைகள் சர்வதேச நாணயத்திடம் வாங்கிய கடனில் அபிவிருத்தி வேலைப்பாடுகளில் தோல்வி அடைந்ததையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

மக்கள் வரிசையில் நின்ற யுகத்திற்கு தான் முடிவு கட்டியுள்ளதாக மார் தட்டும் ரணில் விக்ரமசிங்க மக்கள் தலைமீது கடன் சுமையை சுமத்தியுள்ளமையை அறியாதவர் போல் கருத்து வெளியிடுகிறார்.

ஐ.நா. கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் 60 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 70 வீதமாக இருந்த பண வீக்கத்தை 9 வீதமாக குறைத்துள்ளேன் எனத் தெரிவிப்பது வேடிக்கையான விடயம்.

இலங்கையில் பண வீக்கம் குறைந்தால் பொருட்களின் விலை குறைய வேண்டும் ஆனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள்.

இலங்கை உலக நாடுகளிடம் வாங்கிய கடன் 97 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படும் நிலையில் அதனை 2028 தொடக்கம் 2043 ஆம் ஆண்டு வரை செலுத்துவதற்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்த சாதனையா? கடனை கட்டும் கால நீடிப்பைக் கூட்டி மக்களின் தலையில் வரியை செலுத்தும் கைங்கரியத்தை ஜனாதிபதி செய்துள்ளார்.

மக்கள் மீது கடன் சுமையை சுமத்தி விட்டு தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாவிட்டால் மக்கள் இருண்டயுகத்துக்குச் செல்ல நேரிடும் அல்லது மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டுமென

மிரட்டும் பேச்சுக்களாக அவரது உரை காணப்படுகிறது.

கடன் வாங்கும் நபராக ரணில் விக்ரமசிங்கவும் கடனை வட்டியுடன் செலுத்தும் நபர்களாக இந்த நாட்டு மக்களும் காணப்படுகிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமானால் வெறுமனே கடன் வாங்குவதால் மட்டும் முன்னேற்றி விட முடியாது.

வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் முதலிடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அழைப்பதற்கு இலங்கையில் நீடித்து நிற்கும் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுகளை முன்வைக்காமல் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியாது.

சுமார் 1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு லீவு வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்கள்.

ஆனால் நாட்டில் பல பட்டதாரிகள் வேலையில்லாமல் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் லீவு வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பும் அரச உத்தியோகத்தர்களின் பணத்தை மீதப்படுத்த எண்ணுகிறது.

உண்மையில் ஜனாதிபதி கூறுவது போன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்திருக்குமானால் ஏன் சம்பள அதிகரிப்பு கோரி அரச உத்தியோகத்தர்கள் போராட்டம் நடத்த வேண்டும்.

ஆகவே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதியின் குறித்த உரையானது தேர்தலை இலக்காகக் கொண்டு பொய்களையும் புனை கதைகளையும் கொண்ட உரையாகவே பார்க்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Sharing is caring

More News