இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையில் போர் நடந்து வருகின்றது.
இதில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தத்தமது இராணுவப் படையின் பலத்தை அதிகரிப்பதற்காக இரு நாடுகளுமே வெளிநாடுகளிலிருந்து தமது இராணுவத்துக்கு ஆட்களை இணைத்து வருகிறது.
அதிலும் ரஷ்யா, நல்ல சம்பளம், பாதுகாப்பு, உதவியாளர் பணி என பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி இராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.
அவ்வாறு சேர்க்கப்படுபவர்களுக்கு வலுக்கட்டாயமாக இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் விருப்பம் இல்லாமாலே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் உக்ரெய்னின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் செத்து மடிவது தொடர் கதையாகிவிட்டது.
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களும் ரஷ்ய இராணுவப் படையில் சேர்கின்றமை தொடர்பில் ஏகப்பட்ட விவாதங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரெய்ன் போரில் இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இலங்கை ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.