சீதாவக்க பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதாள உலக குழுவினர் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்காக போலி பிறப்புச் சான்றிதழ்களை வழங்கியமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் விசாரணையை அடுத்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சீதாவக்க பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் பணத்திற்காக போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்குவதாக பல முறைப்பாடுகள் வந்ததையடுத்து அரச நிர்வாக அமைச்சு அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணையில், இந்த பதிவாளர் சில மணி நேரத்திலேயே போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.
பல போலி பிறப்புச் சான்றிதழ்களில் அதனை பெற்றுக் கொள்ளும் நபர்களின் பிறந்த இடம் ஹங்வெல்ல வைத்தியசாலை என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த போலி பிறப்பு சான்றிதழ் வர்த்தகத்தில் ஹங்வெல்ல வைத்தியசாலையின் பல ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும், போலி பிறப்புச் சான்றிதழை பெற முயற்சிக்கும் நபர்கள் ஹங்வெல்ல வைத்தியசாலையில் பிறந்தவர் என்ற ஒரு சீட்டு துண்டை மேலதிக பதிவாளரிடம் வழங்கியதன் பின்னர் உடனடியாக போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்ப்டுள்ளது.