தமிழர் தலைநகரில் விபத்து : வீட்டுக்குள் நுழைந்த எரிபொருள் கொள்கலன்
திருகோணமலை (Trincomalee) – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதேவேளை குறித்த வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை – கண்டி (Kandy) பிரதான வீதியின் 98ஆம் கட்டை பகுதியில் நேற்று (27) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் (Colombo) இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரே விபத்தில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி !
இலங்கையில் (Sri Lanka) வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், வெளிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார். கொழும்பு 7 ஹெக்டர் கோபப்படுவ விவசாய விவகார மற்றும் ஆய்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ருவான் லங்காதிலக்க, தனது இந்த ஐஸ் கிறீம் உற்பத்தியை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் அறிமுகம் செய்துள்ளார். அத்தோடு, கல்கிரியாகம மற்றும் வருணியா ஆகிய பச்சை மிளகாய் வகைகள் இரண்டையும் ஒன்றிணைத்து கலப்பு பச்சை மிளகாய் வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பச்சை மிளகாய் வகையை பயன்படுத்தி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுப்பால் பால், சீனி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய உற்பத்திக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சிறிய யோகட் கப் அளவிலான ஐஸ் கிரீம் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரூவான் லங்காதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தல்- விவாத மேடையில் மோதும் டிரம்ப், பைடன்.!
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமையன்று முதல்முறையாக இடம்பெற உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் ஆகிய இருவரும் பங்கேற்கும் விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இவ் வாண்டு நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் இருவரும் நேரடியாக விவாதிக்கும் முதல் விவாத மேடை இது. குடி நுழைவு, பணவீக்கம், கருக்கலைப்பு உரிமை,உக்ரேன், காஸா ஆகிய பகுதிகளில் நடக்கும் போர் ஆகியவை விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் தலைப்புகளில் அடங்கும். அவர்கள் இருவரின் வயது கூட கவனத்தை ஈர்க்கும் என நிபுணர்கள் முன்னுரைக்கின்றனர். பைடனுக்கு வயது 81, டோனல்ட் டிரம்புக்கு வயது 78. இருவரும் அமெரிக்கர்களின் சராசரி ஓய்வு பெறும் வயதை விட அதிகமாக உள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வயதான வேட்பாளர்கள் ஆவர். விவாதத்தின் போது வாக்காளர்கள் வேட்பாளர்களின் முக்கிய அம்சங்களை உற்று நோக்குவார்கள் என்றும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான வேட்பாளரின் உடற்தகுதி மனதிறன் ஆகியவற்றை நம்ப வைக்கும் வகையில் அவர்களின் விவாதங்கள் இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் பரவும் E. coli தொற்று- சாலட் உட்கொண்ட ஒருவர் பலி!
கறை படிந்த சாலட் இலைகளுடன் தொடர்புடைய ஈ.கோலை நோயால் ஒருவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பிரித்தானிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் வயது அல்லது இருப்பிடம் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சுகாதாரத் தலைவர்கள் அவர்களுக்கு அடிப்படை மருத்துவ நிலை இருந்த நிலையில், உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். பிரித்தானிய ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் புதுப்பில், ஜூன் 25 ஆம் திகதி வரை ஷிகா நச்சுத்தன்மையை உருவாக்கும் ஈ.கோலை தொற்றால் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது மொத்த வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 250ஐக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 122 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. E. coli தொற்று கறை படிந்த கீரை இலைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த மாத தொடக்கத்தில் 11 பெரிய கடைகளில் விற்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள், ரேப்கள் மற்றும் சாலடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘சாப்பிட வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிருணிக்காவுக்கு 3 வருட சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 2015 ல் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடாத்திய குற்ற வழக்கிலேயே இந்த தீர்ப்பு ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் ஆனந்த் குமார் சுந்தர்.
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இங்கிலாந்தின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அங்கு ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. பிரதமராக ரிஷி சுனக் இருக்கிறார். இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆனால், பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் கடந்த சில மாதம் முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், பிரிட்டனில் பிரிட்டனை பொறுத்தவரை மிக முக்கிய மற்றும் பெரிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் இருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் இருக்கிறார். பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேநேரம் எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு பாராளுமன்ற நடைமுறை இங்கிலாந்தில் பின்பற்றப்படுவது வழக்கம். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம். பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர் ஆவார். பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்ல மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி செய்யப்படும் 01 லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 150 ரூபாவை அரசாங்கம் அறவிடுகின்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்கும் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன். இந்நிலையில் நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்த் தேவை 25,868 மெற்றிக் டொன் எனவும், தற்போது நாட்டில் 51,457 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய் இருப்பதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இணக்கம்
இந்தியா (India) – இலங்கை (Sri Lanka) கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு (Kachchatheevu) பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பு இன்று (28.06.2024) மாலை விடுக்கப்படும் என இந்திய தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தித்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், உடன்படிக்கையின் விபரங்கள் தொடர்பில் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கை ஜூன் மாதம் 26 – 28ஆம் திகதிகளில் செய்து கொள்ளப்பட்டு, 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலே தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், குறித்த உடன்படிக்கை 1974ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதியன்றே நடைமுறைக்கு வந்தது. இதற்கிடையில், நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும், அதனை நம்பலாம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சூரிய சக்தி மின் உற்பத்தியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை
சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை, மொத்த கொள்ளளவான 1,251 மெகாவோட் திறனை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekere) தெரிவித்துள்ளார். சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த வரைபடத்தை வெளியிட்டு கருத்துக்களை முன்வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஏற்கனவே 944 மெகாவோட்கள், மேற்கூரை சூரிய மின்சக்தி மூலம் தேசிய மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 156 மெகாவோட்கள், நிலத்தடி சூரிய மேம்பாட்டிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் கூரை மேம்பாட்டிலிருந்து 1,044 மெகாவோட் மின்சாரத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நீண்ட கால உற்பத்தித் திட்டத்தில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 150 மெகாவோட் என்ற அளவில் மேற்கூரை சூரிய மின் உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராய்வு
திருகோணமலை (Trincomalee) மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது, நேற்று (27.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலக பிரிவுகளில் அரசுக்குரிய 300 மீற்றர் அகலமான கடற்கரை வலயத்தில் கனிய மணல் அகழ்வு செய்வதற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி வழங்க அங்கீகாரம் பெறுதல், நிலாவெளி தொடக்கம் கும்புறுப்பிட்டி கிழக்கு வரையான கடற்கரை 300 மீற்றர் பரப்பளவான அரச காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நீண்டகால அடிப்படையில் வழங்க அங்கீகாரம் பெறுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதேவேளை, மாவட்டத்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார துறை வெற்றிடங்கள், மூதூர் கட்டைபறிச்சான் பால நிர்மாணம் தொடர்பான விடயம், மக்களின் கோரிக்கைக்கு அமைய புதிய நீர்க்குழாய் இணைப்பு வழங்குவதில் நிலவும் தாமதம் தொடர்பான விடயம், இலக்கம் 115, 22 யுனிற்றில் கிராம சபை கிணறு உள்ள இடத்தில் கந்தளாய் ரஜவெவ முதியோர் சங்கத்துக்கு காணி வழங்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டன. மேலும், குச்சவெளி, திரியாய் கிராம பிரிவில் “மொபைல் பிளான்ற்” நிர்மாணிப்பதற்காக 1 ஏக்கர் காணியை இலங்கை கனிய மணல் வழங்குவதற்கு அங்கீகாரம் பெறுதல், பேண்தகு வன முகாமைத்துவம் ஊடாக காணி பிரச்சினைகளை தீர்த்தல், கந்தளாய் வீதியின் இருபுறங்களில் தயிர் வியாபாரத்தில் ஈடுபடுவதனால் நிரந்தரமாக வசிக்கும் மக்களின் காணி உரிமை பிரச்சினை, உப்பாறு, கண்டல்காடு விளைநிலங்களுக்கு ஏற்படும் சேதம், கிண்ணியா பிரதேச சபை பிரதேசத்துக்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதேச அலுவலகத்தை பெறுதல், போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.