இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் பயன் பெறப்போகும் தரப்பினர்!
இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) ஆதரவளிக்குமென அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபோமி கடோனோ (Takafumi Kadono) தெரிவித்துள்ளார். அதேநேரம், நுண்நிதி துறையை வலுப்படுத்துவதிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிக கவனம் செலுத்துமென டக்காஃபோமி கடோனோ கூறியுள்ளார். இலங்கையில் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆராய்ந்து வருவதாக அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபோமி கடோனோ சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 100 மில்லியின் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் குறித்த நிதி உதவி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவது இணங்காணப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், குறித்த நிறுவனங்களில் உள்ள தலைமை அதிகாரி உள்ளிட்ட ஊழியர்களுக்கு தேவையான அறிவுசார் உதவிகளையும் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக டக்காஃபோமி கடோனோ தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் உள்ள ஏனைய நிதி நிறுவனங்களும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு வருமாறு அழைப்பு…!
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை 3-ஆம் திகதி மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!
தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
யாழில். வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார் , மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பவற்றை மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை , வாகனங்களுக்கு தீ வைத்தமை , நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , குறித்த சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக , வீடு உடைப்புக்கள் , வாகனங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசு நிர்வாக அதிகாரிகளுக்கு 25,000 உதவித்தொகை
அரச சேவையின் நிறைவேற்று சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தியோகத்தர்களின் சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளுக்குப் பதிலாக, அவர்களின் கால அளவைப் கருத்திற்கொள்ளாது இந்த மாதாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அது கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில். இது தொடர்பிலான சுற்றறிக்கையை வெளியிடும் அமைச்சின் செயலாளர், இது ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். திறைசேரியின் உடன்படிக்கைக்கு அமைய இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பில் அரசாங்க நிறைவேற்று உத்தியோகத்தர்களின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.ஏ.எல்.உதயசிறி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைக்கு விசேட நிவாரணம்-மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையில் கணிசமான அளவு குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு பொருளாதார ரீதியில் குறிப்பிட்ட மட்டத்தை எட்டியுள்ள நிலையில் எரிபொருள் விலைக்கு சில விசேட நிவாரணங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வழக்கமான பெட்ரோல் விலை லிட்டருக்கு 20-30 ரூபாயும், வழக்கமான ஒயிட் டீசல் விலை லிட்டருக்கு 15-20 ரூபாயும் குறைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
நாளை 15 மணிநேர நீர் வெட்டு – வெளியான அறிவிப்பு.
கொழும்பின் (Colombo) பல பகுதிகளில் நாளை (29.06.2024) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைமையின் புனரமைப்புப் பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனாலேயே, நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
உடன் வெளியேறுங்கள்: கனடா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.
லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார். லெபனானில் தற்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கனேடியர்கள், லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்வது உசிதமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மேலும் லெபனானில் தங்கியுள்ள கனேடியர்கள் வர்த்தக விமானங்களின் ஊடாக அங்கிருந்து வெளியேறுவது பொருத்தமானது என அறிவித்துள்ளார். லெபனானில் ஆயுதப் போராட்டம் வெடித்தால் அங்கு வாழ்ந்து வரும் கனேடியர்கள் வெளியேறுவதற்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே லெபனானை விட்டு வெளியேறுமாறு கனேடிய பிரஜைகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்ளும் போது அரசாங்கத்தின் பயண எச்சரிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் மேலும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இறந்தவர்களுக்கும் நான்கு கோடி ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கிய அரசு.
கம்பஹா (Gampaha) மாவட்டத்தின் 13 பிரதேச செயலகங்களில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்த 419 ஓய்வூதியர்களுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை சுமார் நான்கு கோடி ரூபாய் வரை அதிகளவாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இறந்தவர்களுக்கு அறிவிப்பதில் தாமதம், ஆயுள் காப்பீடு வழங்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படாமை, ஓய்வூதிய சுற்றறிக்கைகளை பின்பற்றாமை போன்ற பல காரணங்களுக்காக இந்தக் ஓய்வூதியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கம்பஹா மாவட்ட செயலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு அண்மையில் கூடிய போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பாரிய நிதி மோசடி! கைது செய்யப்பட்ட 60 இந்தியர்கள்
இலங்கையில் (Sri Lanka) பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 60 இந்தியர்களை (Indians) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று (27) கைது செய்துள்ளனர். இதன்படி, தலங்கம (Thalangama), மாதிவெல (Madiwela) மற்றும் நீர்கொழும்பு (Negombo) ஆகிய பகுதிகளில் வைத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சந்தேக நபர்களிடமிருந்து 135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணையத்தளமொன்றை குறித்த தரப்பினர் இலங்கையில் நடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி முதல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது, சீனா (China), பிலிப்பைன்ஸ் (Philippines), மாலைதீவு (Maldives), பாகிஸ்தான் (Pakistan), இந்தியா மற்றும் நேபாளம் (Nepal) உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர். சமூக ஊடகங்கள் ஊடாக கைது செய்யப்பட்ட தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.