சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்காவுக்கு(Sarath Fonseka) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் செயற்குழு இந்த வாரத்தில் கூடி சரத் போன்சேக்காவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவ்வாறு கட்சித் தலைமையை விமர்சிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை சரத் பொன்சேகா ஜனாதிபதியுடன் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறு எனினும் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்துள்ளார். ராஜித, ஜனாதிபதி ரணிலை புகழ்ந்தாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, சரத் பொன்சேகா போன்று விமர்சனம் செய்யவில்லை என ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த வார நாடாளுமன்றில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார். இதன்போது தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார். இதேவேளை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு(Lakshman Kiriella) தனக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு நாடாளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இவ் விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக் கணக்குகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத தேக்க நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை, நிறுவனங்கள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற காரணிகள் வழக்குகள் தேக்கமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊழியர் சேம இலாப நிதிக் கட்டமைப்புக்களுக்கு குறித்த நிதியைச் செலுத்துவதற்கு தவறிய உரிமையாளர்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுக்கணக்குகளுக்கான குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள்; இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக் குழுவினர்..!
ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசேட தூதுக்குழுவுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மொஸ்கோவில் இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை யாழில் நாளை ஆரம்பம்…!
நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நாளையதினம்(25) காலை 8.30 மணிக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை வாழ் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உருவச்சிலை வவுனியாவில் திறந்து வைப்பு…!
ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் திருவுருவச் சிலை நேற்றையதினம்(23) வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது. ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதனால் குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவு கல்லினை கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் மற்றும் கட்சியினுடைய உப தலைவர் கென்றி மகேந்திரன் ஆகியோர் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர். இதனை அடுத்து சிறீ சபாரத்தினத்தின் சிலைக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்ததோடு மலர் அஞ்சலியும் செலுத்தி வணக்கம் செலுத்தி இருந்தனர். இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினுடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர், தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய ஆரம்பகால போராளிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அவசர பாராளுமன்ற கூட்டம் – 27, 28ஆம் திகதிகளில் விசேட சபை அமர்வு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் 26ஆம் திகதி மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக அறிவிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. தற்போது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், இது தொடர்பான அமெரிக்கா வின் வொஷிங்டன் பேச்சுவார்த்தையில் இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக நாளை மறுதினம் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் அதன் பின்னர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் அவசர பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆளுங்கட்சியில் இவ்வாரம் இணையும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அமைச்சரின் பாதுகாப்புப்பிரிவு அதிகாரியொருவர் கைது: விசாரணையில் வெளியான காரணம்
தனது கணவருடன் நெருங்கி பழகிய பெண்ணிடம் ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கேட்டு சில தவறான காணொளிகளை இணையத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்திய ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த குற்றத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் பொலிஸ் அதிகாரியின் கணவரான அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பன்னிபிட்டிய, தெபானம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கணவருடன் பழகிய பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்பேபுஸ்ஸ பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதன்பின்னர், கணவரின் தொலைப்பேசியில் உள்ள காணொளிகளை இணையத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி ஐம்பது இலட்சம் ரூபாய் பணத்தை தருவதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பில், குறித்த பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அந்த பணியகத்தின் அதிகாரிகள், தலைமை பொலிஸ் பரிசோதகர் சாமந்தி ரேணுகா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால், ஓய்வு பெற்ற பெண் காவலர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய கணவன் – மனைவியிடம் சம்பவம் தொடர்பில் துறை ரீதியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியீடு…!
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நீக்கி, சமமான கல்வியை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான புதிய சுற்றறிக்கையை இன்று (24) வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த சுற்றறிக்கைக்கு கடந்த 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் பாதிக்கப்படாத வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால் அவர்களை உள்வாங்க வேண்டும் என புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரிவு 2.1, சில ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகளின்படி, பிறப்புச் சான்றிதழ் இல்லாத மற்றும் 5 வயதுக்கு குறைவான வயதுடைய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனுமான வயது பிள்ளைகள் நியாயமற்றதாகவோ அல்லது பாரபட்சமாகவோ நடத்தப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரிவு 6.2.5ன் படி செய்யப்பட்ட திருத்தத்தில், ஒருவரின் சொந்தக் குழந்தை அல்லது பேரக்குழந்தை, பேத்தி அல்லது மனைவியின் சகோதர சகோதரிகளின் குழந்தைகள், மனைவியின் சகோதர சகோதரிகளின் குழந்தைகளாக திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அங்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான புதிய சுற்று நிருபம் இன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, விண்ணப்பதாரர்கள் முறைகேடுகள் செய்ய முடியாத வகையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: விரைவில் தமிழ்த் தரப்புடன் பேச்சு..! விஜயதாச அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் ஏற்கனவே உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் விரைவில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றமைக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் ஊடாக நிறைவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பெயர்ப்பலகையை மட்டும் சிலர் வைத்திருகின்றார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பேருந்து எனது கையில் தான் உள்ளது. ஆகவே அந்தக் கட்சியின் வழக்கு விவகாரங்கள் எமது பயணத்தினை தடுத்து நிறுத்திவிடமுடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. வழக்கு விவகாரங்கள் நிறைவடைந்தால் அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடுவோம். இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. தேர்தல்கள் காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கலாசாரத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்லில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். அந்த தீர்மானத்துக்கு அமைவாக போட்டியிடுவதில் உறுதியாக இருக்கின்றேன். தேசியப் பிரச்சினை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்களும், தென்னிலங்கை மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு காணப்பட வேண்டும். தேர்தல் அரசியலை மையப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தினை உயர்த்துவதன் மூலம் நன்மைகளை அடைவதற்கு எதிர்காலத்திலும் இடமளிக்க முடியாது என்றார்.
அஸ்வசும திட்டத்தில் சமுர்த்தி மானியத்தின் மூன்று மடங்கு நிவாரணம்! அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அதில், மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் திட்டம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகளைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார். இது சமுர்த்தி மானியத்தின் மூன்று மடங்கு நன்மைகளைக் கொண்டுள்ளது. சகல துறைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்கள் தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.