தனது கணவருடன் நெருங்கி பழகிய பெண்ணிடம் ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கேட்டு சில தவறான காணொளிகளை இணையத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்திய ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த குற்றத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் பொலிஸ் அதிகாரியின் கணவரான அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பன்னிபிட்டிய, தெபானம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையறிந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கணவருடன் பழகிய பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்பேபுஸ்ஸ பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இதன்பின்னர், கணவரின் தொலைப்பேசியில் உள்ள காணொளிகளை இணையத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி ஐம்பது இலட்சம் ரூபாய் பணத்தை தருவதாக மிரட்டியுள்ளார்.
இது தொடர்பில், குறித்த பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அந்த பணியகத்தின் அதிகாரிகள், தலைமை பொலிஸ் பரிசோதகர் சாமந்தி ரேணுகா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனால், ஓய்வு பெற்ற பெண் காவலர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய கணவன் – மனைவியிடம் சம்பவம் தொடர்பில் துறை ரீதியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.