ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் ஏற்கனவே உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் விரைவில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றமைக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் ஊடாக நிறைவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பெயர்ப்பலகையை மட்டும் சிலர் வைத்திருகின்றார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பேருந்து எனது கையில் தான் உள்ளது. ஆகவே அந்தக் கட்சியின் வழக்கு விவகாரங்கள் எமது பயணத்தினை தடுத்து நிறுத்திவிடமுடியாது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. வழக்கு விவகாரங்கள் நிறைவடைந்தால் அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடுவோம்.
இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.
தேர்தல்கள் காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கலாசாரத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்லில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். அந்த தீர்மானத்துக்கு அமைவாக போட்டியிடுவதில் உறுதியாக இருக்கின்றேன்.
தேசியப் பிரச்சினை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்களும், தென்னிலங்கை மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு காணப்பட வேண்டும்.
தேர்தல் அரசியலை மையப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தினை உயர்த்துவதன் மூலம் நன்மைகளை அடைவதற்கு எதிர்காலத்திலும் இடமளிக்க முடியாது என்றார்.