Search
Close this search box.

வவுனியாவில் சாரதி மீது துப்பாக்கிச் சூடு

வவுனியா ஓமந்தை  பாலமோட்டை பிரதேசத்தில் இன்று (24) பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கெப் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, “சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் மேற்கொள்ளப்படுகிறது” என, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து   அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.      அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்   ஹப் ரகர வாகனத்தை சோதனைக்குட்படுத்த முற்படும்போது அவ் வாகனம் தப்பிச் செல்ல முயன்றது. இதனையடுத்து பொலிஸாரால் அவ் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக    பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் இருந்த கடத்தல்காரர்கள்  வாகனத்தை விட்டு  தப்பி ஓடிச்சென்றுள்ளனர். இதன்போது  பெரிய அளவிலான 17   மரக் கட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அவசர எச்சரிக்கை – 24 மணித்தியாலங்களுக்கு ஆபத்து

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடலலை மேலெழக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டது இலங்கை நோக்கி வந்த விமானம்

காம்பியாவை தளமாகக் கொண்ட குத்தகை நிறுவனமான மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு ஏர்பஸ் ஏ340 விமானங்களை அடையாளம் தெரியாத தரப்பினர் ஈரானில் தரையிறக்கி வெற்றிகரமாக கடத்தியுள்ளனர். குறித்த விமானங்கள் லிதுவேனியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், ஈரானில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் ஒன்று மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும், மற்றொன்று தெற்கு ஈரானில் உள்ள சார்பஹாரில் உள்ள கொனாரக் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் லிதுவேனிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இரண்டு விமானங்களும் ஈரானிய வான்பரப்பிற்குள் நுழைந்தவுடன், அவற்றின் இறுதி நிலைகளைக் கண்காணிப்பதைத் தடுக்க, அவற்றின் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்நாட்டின் விமான நிறுவனமான மஹான் ஏரில் விமானங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குறித்த இரு விமானங்களையும் கடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு ஏர்பஸ் ஏ340 லிதுவேனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் பிலிப்பைன்ஸ் செல்ல வேண்டியுள்ளது. எனினும், குறித்த விமானம் தனது இலக்கை அடைவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. “இந்த விமானம் பிலிப்பைன்ஸுக்கு பறக்க வேண்டும், ஆனால் அது ஈரானிலும் முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதைத் தடுக்க நாங்கள் சக்தியற்றவர்கள். அதனால்தான் முதல் வணிக விமானம் ஈரானில் தரையிறங்கியதை அறிந்ததும் நாங்கள் குறித்த விமானத்தை புறப்பட அனுமதிக்கவில்லை” என்று லிதுவேனியாவில் உள்ள சியாலியா விமான நிலையத்தின் இயக்குனர் அவுரேலிஜா குயெசாடா தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. நான்கு வணிக ஏர்பஸ் ஏ340 விமானங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து உஸ்பெகிஸ்தானை நோக்கி புறப்பட்டன, ஆனால் ஈரானிய வான்வெளியை நெருங்கி, அவற்றின் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்தி ஈரானில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. ஈரான் மீதான பொருளாதார தடைகள் காரணமாக, ஈரானிய வணிக விமான நிறுவனங்கள் புதிய வணிக விமானங்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகள் வணிக விமானத் துறையில் நெருக்கடிக்கு வழிவகுத்தன, சுமார் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் பறக்க முடியாத நிலையில் உள்ளன. தொழில் வல்லுநர்கள் ஈரானுக்கு 400 புதிய வணிக விமானங்கள் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் பொருளாதாரத் தடைகள் புதிய விமானங்களை வாங்குவதைத் தடுக்கின்றன மற்றும் ஏற்கனவே உள்ள விமானங்களின் மேம்படுத்தல்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தடுக்கின்றன. இந்த கட்டுப்பாடுகள் நாட்டிற்குள் விமான விபத்துக்கள் அதிகரிக்க வழிவகுத்தன. ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, 1979 இல் இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து, விமான விபத்துக்களால் 1,755 உயிரிழப்புகள் பதவிவாகியுள்ளன. தேசிய விமான நிறுவனமான ஈரான் ஏர், 335 விமானங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் அவற்றில் பாதி உதிரி பாகங்கள் கிடைக்காததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெருமளவில் இலாபம் ஈட்டும் தனியார் வகுப்புக்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில்  தனியார் வகுப்புக்களின் மூலமான வருடாந்த புரள்வு சுமார் 200 பில்லியன் ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனியார் வகுப்புக்கள் தொடர்பில் உடன் ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த பாடசாலைக் கட்டமைப்பினையும் பின்தள்ளி தனியார் வகுப்பு கலாசாரம் தலைதூக்கியுள்ளது. தனியார் வகுப்புக்களில் தகுதியற்றவர்களும் வகுப்பு நடாத்துகின்றனர். இது ஒர் பாரதூரமான நிலைமை, தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால் அது மாணவர்களை மோசமாக பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதானி நிறுவனத்திற்கான அனுமதி இடைநிறுத்தம்?

மன்னார் (Mannar) மற்றும் பூநகரியில் அமைக்கப்படவுள்ள 484 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களுக்கான அனுமதியை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளது. இந்த திட்டங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள், திட்டத்தின் குறைந்த செலவு மற்றும் தொழில்நுட்ப இணக்கத்தன்மையை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை ஆணைக்குழு, தமது அனுமதி மறுப்புக்கான காரணமாக தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் அதானி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான முழு வரைவு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போன்ற அடிப்படைத் தகவல்கள் கூட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது அத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் முடிவுகள் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கிய சுற்றுச்சூழல் உரிமத்தின் விவரங்கள் கூட சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் அனுமதி மறுப்பை அடுத்து குறித்த ஆவணங்களை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதி வழங்கியது.

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

இலங்கையின் (Sri Lanka) வடக்கே யாழ்ப்பாணம் (Jaffna) இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் (United Kingdom) நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். கடந்த 20 வருடமாக சட்டன் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவுள்ளார். அத்தோடு, சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக தெரிவிக்கும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும் இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், சட்டத் தொழிலைத் தொடர்ந்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணி தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன் கவுன்சிலராக இருந்து மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றார். மேலும், தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் காதல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18 வயதுடைய இளைஞனின் கை துண்டாடப்பட்டுள்ளது. காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம்! – ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இதேவேளை தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

.இன்னும் 10 நாட்களில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..! வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரத்திற்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிப்பதாகவும், இந்த வாரத்துக்குள் முடியாவிட்டால், வாரம் முடிந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு பெறுபேறுகளை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை, பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிடவிருப்பது கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் தொடங்கி மே 15 ஆம் திகதியே முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் 527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (23.06) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வருகின்றார். தாயார் கூலி வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளைகளை அயலில் உள்ள வீட்டில் விட்டுச் செல்வது வழமை. இவ்வாறு விட்டுச் சென்ற நிலையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வவுனியா பொலிசில் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.