சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச இழப்பீடு: ரணில் விடுத்துள்ள பணிப்புரை
சீரற்ற காலநிலையினால் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு நட்டஈடு வழங்குமாறு சிறிலங்கா ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் அதிபர் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார். இதன் படி, அந்த வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு குறிப்பிட்ட அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டு சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவும் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது தொடர்பாக அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதித்த மோசமான வானிலையினால் ஏற்பட்ட பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது அல்லது அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு தகுந்த இழப்பீடு வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவுள்ள இலங்கை – செய்திகளின் தொகுப்பு
இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை திவால் நிலையில் இருந்து விடுவிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால் திவால் அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டது. இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்
பாலின சமத்துவ சட்டமூலத்தை தேரர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். கடிதத்தை கையளிப்பதற்காக அவர் நாடாளுமன்றம் நோக்கி சென்றதுடன், நாடாளுமன்ற வாயிலுக்கு வந்த அதிகாரி ஒருவர் அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னர் அந்த சட்டமூலத்தை கஸ்ஸப தேரர் தீ வைத்து எரித்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் வந்திறங்கியதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
யாழில் எரிகாயங்களுடன் அலறியடித்து ஓடிவந்த நபரால் பரபரப்பு…!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் நேற்று இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய பவானி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா..? என்ற கோணத்தில், மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹஜ் யாத்திரையில் 1,000 பேர் உயிரிழப்பு: 90 பேர் இந்தியர்கள்
கடும் வெப்பம் காரணமாக இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை சென்றோரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டிவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் புனிதப் பயணத்துக்குப் பதிவு செய்யாதவர்கள் என்ற விவரத்தையும் அது குறிப்பிட்டு உள்ளது. புதிதாக ஏற்பட்ட 58 மரணங்கள் எகிப்து நாட்டவர் சம்பந்தப்பட்டவை என்று அரேபியத் தூதரகம் கூறியது. புனிதப் பயணத்தில் பங்கேற்றோரில் உயிரிழந்தோர் எணிண்கை 658 என்று குறிப்பிட்ட அந்தத் தூதரகம், அவர்களில் 630 பேர் பயணத்துக்குப் பதிவு செய்யாதவர்கள் என்று தெரிவித்தது. ஹஜ் புனித யாத்திரைக்கு விசா எடுப்பதற்கான செலவுகளுக்குப் பணமில்லாதோர், முறைப்படி பதிவு செய்யாமல் பல்வேறு வழிகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் 90 பேர் கடுமையான வெப்பத்திற்குப் பலியாகிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் புனித யாத்திரை தொடர்பாக விபத்து எதுவும் பதிவாகவில்லை என்று தகவல்கள் கூறின. முன்னதாக, குறைந்தபட்சம் 68 இந்திய நாட்டவர்கள் புனித யாத்திரையின்போது உயிரிழந்ததாக அரேபியத் தூதரகம் கூறி இருந்தது. அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஏஎஃப்பி, பெரும்பாலானவர்கள் இயற்கை காரணங்களாலும் வயது முதிர்ச்சியாலும் உயிரிழந்ததாகக் கூறியது, அதேநேரம் சிலர் வானிலை நிலவரம் காரணமாக மாண்டதாக தாங்கள் உணர்வதாகவும் அது தெரிவித்தது. உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள வேளையில் இந்தியர்கள் பலர் காணாமல்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அரேபியத் தூதரகம் வெளியிட்ட தகவலில் இவ்வாண்டு 550 யாத்திரிகர்கள் உயிரிழந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மெக்காவில் நிலவிய அதிகபட்ச வெப்பநிலை காரணமாக மாண்டதாகவும் கூறியிருந்தது. இந்தத் தகவலையும் ஏஎஃப்பி வெளியிட்டது. அங்கு வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புனிதப் பயணத்தின்போது வெப்பம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 2,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 1.8 மில்லியன் பேர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா
ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவருத் சூழலில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக இம்முறை நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அமைய உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருந்ததுடன், மக்கள் வாக்குகளால் தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடுமையான போராட்டங்களால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தார். இதனால் இம்முறை மக்களின் மனநிலை பற்றிய தெளிவான கருத்துகளை எவராலும் முன்வைக்க முடியாதுள்ளது. நாட்டில் பாரிய மாற்றமென்று அவசியம் என்பதையே அனைத்தின மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். அதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளுங்கட்சியின் வேட்பாளராக பரந்தப்பட்ட கூட்டணியொன்றின் ஊடாக களமிறங்க உள்ளார். என்றாலும், இன்னமும் ஐ.தே.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சுகள் இறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதனை அக்கட்சிகள் நாட்டு மக்களுக்கும் அறிவித்துவிட்டன. இந்த நிலையில் பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர சர்வஜன அதிகாரம் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்க உள்ளார். அதேபோன்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் வேட்பாளராக களமிறங்கும் எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அதற்கு பொதுஜன பெரமுன இணங்க வேண்டும். சு.கவின் வேட்பாளராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சு,கவின் அதிகாரம் தற்போது அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தரப்பிடம் உள்ளது. அதேபோன்று காலிமுகத்திடல் போராட்ட குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ள “மக்கள் போராட்ட முன்னணி“யின் வேட்பாளராக சரத் பென்சேகா களமிறக்கப்பட அறிய முடிகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
தந்தை ஒருவரின் கொடூர செயல்! சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட காணொளி
தனது 4 வயது மகனை கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் வைத்து நேற்று (20) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா தோட்டம் மேல் பிரிவு உடுபோக உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், எனினும் அவர் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால், குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, குறித்த கணவர், சமூக ஊடகம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் இந்த வீடியோவை ஏனைய சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை, வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : நால்வர் காயம்
பதுளை(Badulla) – மஹியங்கனை பிரதான வீதியில் மீகஹகிவுல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (20.06.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மீகஹகிவுலயிலிருந்து பொல்கஹராவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதி தனிப்பட்ட தேவைக்காக கடை ஒன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி விட்டு வெளியே சென்ற போது, முச்சக்கரவண்டியானது சாரதியின்றி நகர்ந்து சென்று 30 அடி ஆழமுடைய கால்வாயொன்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உலக சந்தையில் சீனி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.