Search
Close this search box.

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நீர் விநியோக கட்டமைப்பு – விளக்கமளிக்கும் சபை

இலங்கையில் மிகவும் மோசமான முறையிலும் சுத்தமற்ற முறையிலும் குடிநீர் வழங்கப்படுவதாக இணையத்தில் வெளியான புகைப்படத்தால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த புகைப்படங்கள் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விளக்கமளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தாய்லாந்தில் இருந்து அகற்றப்பட்ட பழைய நீர் குழாயின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் நீர் பாவனையாளர்களை சிலர் தவறாக வழிநடத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கலடுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீர் விநியோகக் குழாய் வெடித்து சிதறியதன் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னணியில் இந்த புகைப்படம் தவறான முறையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு குறிப்பிட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீர் பாவனையாளர்களால் வழங்கப்படும் சுத்தமான நீர் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பொய்யான செய்திகளை பரப்புவது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்

கம்பஹா தொடருந்து  நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு தேரர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன. இந்நிலையில் சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 220 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களை கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்றுடன் மழை பெய்யும் – இன்றைய வானிலை தொடர்பில் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.