பதுளை(Badulla) – மஹியங்கனை பிரதான வீதியில் மீகஹகிவுல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (20.06.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மீகஹகிவுலயிலிருந்து பொல்கஹராவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி தனிப்பட்ட தேவைக்காக கடை ஒன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி விட்டு வெளியே சென்ற போது, முச்சக்கரவண்டியானது சாரதியின்றி நகர்ந்து சென்று 30 அடி ஆழமுடைய கால்வாயொன்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.