கடும் வெப்பம் காரணமாக இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை சென்றோரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டிவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் புனிதப் பயணத்துக்குப் பதிவு செய்யாதவர்கள் என்ற விவரத்தையும் அது குறிப்பிட்டு உள்ளது.
புதிதாக ஏற்பட்ட 58 மரணங்கள் எகிப்து நாட்டவர் சம்பந்தப்பட்டவை என்று அரேபியத் தூதரகம் கூறியது.
புனிதப் பயணத்தில் பங்கேற்றோரில் உயிரிழந்தோர் எணிண்கை 658 என்று குறிப்பிட்ட அந்தத் தூதரகம், அவர்களில் 630 பேர் பயணத்துக்குப் பதிவு செய்யாதவர்கள் என்று தெரிவித்தது.
ஹஜ் புனித யாத்திரைக்கு விசா எடுப்பதற்கான செலவுகளுக்குப் பணமில்லாதோர், முறைப்படி பதிவு செய்யாமல் பல்வேறு வழிகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் 90 பேர் கடுமையான வெப்பத்திற்குப் பலியாகிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் புனித யாத்திரை தொடர்பாக விபத்து எதுவும் பதிவாகவில்லை என்று தகவல்கள் கூறின.
முன்னதாக, குறைந்தபட்சம் 68 இந்திய நாட்டவர்கள் புனித யாத்திரையின்போது உயிரிழந்ததாக அரேபியத் தூதரகம் கூறி இருந்தது.
அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஏஎஃப்பி, பெரும்பாலானவர்கள் இயற்கை காரணங்களாலும் வயது முதிர்ச்சியாலும் உயிரிழந்ததாகக் கூறியது, அதேநேரம் சிலர் வானிலை நிலவரம் காரணமாக மாண்டதாக தாங்கள் உணர்வதாகவும் அது தெரிவித்தது.
உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள வேளையில் இந்தியர்கள் பலர் காணாமல்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அரேபியத் தூதரகம் வெளியிட்ட தகவலில் இவ்வாண்டு 550 யாத்திரிகர்கள் உயிரிழந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மெக்காவில் நிலவிய அதிகபட்ச வெப்பநிலை காரணமாக மாண்டதாகவும் கூறியிருந்தது. இந்தத் தகவலையும் ஏஎஃப்பி வெளியிட்டது.
அங்கு வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு புனிதப் பயணத்தின்போது வெப்பம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 2,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 1.8 மில்லியன் பேர் கலந்துகொண்டனர்.