Search
Close this search box.

கிளிநொச்சியில் ஜஸ்கிறிமிற்காக அணி திரண்ட மக்கள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கிளிநொச்சியின்   சந்திர பூங்காவிற்கு அருகில் பொசன் போயாவை முன்னிட்டு இன்று ஜஸ்கிறிம் தன்சல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது பெருமளவிலான மக்கள் அணி திரண்டு வந்து ஜஸ்கிறீமிற்காக மிக நீண்ட வரிசையில் காத்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,207 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. பொசன் தான சாலைகளை பரிசோதனைக்குட்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரியாலயம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் 9, 425 குளிர்பான தானசாலைகளும் 8,782 உணவுப் பொதி உள்ளிட்ட பல்வேறு உணவு வகை தான சாலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எரிபொருள் விநியோகத்தில் பாரிய மோசடி!

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 31,021 மில்லியன் ரூபா மேலதிக தரகு பணமாக செலுத்தப்பட்டமையினால் பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை (Ceylon Petroleum Corporation) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைத்த போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் செலுத்திய இந்த கட்டணத்தால் தற்போது ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றருக்காக 05 ரூபாய் 85 சதமும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றருக்காக 07 ரூபாய் 50 சதமும், ஓட்டோ டீசல் லீற்றருக்காக 05 ரூபாய் 80 சதமும், சூப்பர் டீசல் லீற்றருக்காக 06 ரூபாய் 96 சதம் பணமும் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான சுற்றறிக்கை வழங்கப்படுவதில் இழுபறி நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 3,416 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்படி கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவான மோசடி செய்துள்ளமை தொடர்பில் விற்பனை பிரிவு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் (COPE) குழுவின் உறுப்பினர்கள், இந்த மோசடிகளுக்கு கூட்டுத்தாபனத்தின் உள்ளக அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இது தொடர்பில் கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் வந்திருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அந்த அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை ஏழு நாட்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோப் குழு பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளது டன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்த துடன்,சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சோதனை சாவடியை அகற்றி தருமாறு நேரடி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் (21) குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளது டன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் ராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் ராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மயமாகும் ஊழியர் சேமலாப நிதியத் தரவுகள்

மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது. தொழிலாளர் திணைக்களத்தின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குக் குழு, பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடிய போதே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் திணைக்களத்தில் முதலாளிகளைப் பதிவு செய்த பின்னர், குறித்த ஊழியர் சேமலாப நிதி, மத்திய வங்கிக்கு வழங்கப்படுவதாகவும், மத்திய வங்கி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழிலாளர் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள் பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தரவுகளைப் பெறுவதற்குப் பதிலாக, தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பை தொழிலாளர் திணைக்களம் கொண்டிருக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது மக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு அவசர அறிவுறுத்தல்

காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்திய சிகிச்சைகளை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நோயை ஏற்படுத்தும் பக்டீரியா முக்கியமாக எலிகளின் சிறுநீரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கால்நடைகள்,நாய்கள் மற்றும் பன்றிகளின் மலம் மற்றும் சிறுநீரில் இந்த பக்டீரியாக்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பு வருடத்தின் கடந்த 6 மாதங்களில் இலங்கையில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நோய்க்கிருமி பக்டீரியாக்களுடன் விலங்குகளின் சிறுநீரில் இணைந்த பிறகு, அது கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் சளி சவ்வுகள் வழியாக மனித உடலில் நுழைகின்றது. மேலும் இந்த தொற்றுக்கு பல சமயங்களில் சிகிச்சை பெறாதவர்கள் உயிரிழப்பதாகவும், எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெட்டு காயங்கள் அல்லது வேறு காயங்கள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர், இந்த தொற்றை பொறுத்தவரையில் ஆபத்தில் உள்ளனர் என்றும் வைத்தியர் ஒருவர் எச்சரித்துள்ளார் எனவே அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு ராகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் டொக்டர் கோலித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதிக காய்ச்சலால், கண்கள் சிவத்தல், வயிற்றுவலி , இருமல், புள்ளிகள், தசை வலி. தலைமுடியில் வலி போன்ற அறிகுறிகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இவ்வாறான அறிகுறிகள் வந்தால் வைத்தியரை உடனடியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சஜித்துடன் இணைந்த 20 இலட்சம் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக 20 இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினர்கள் அதிகளவில் திரண்டதால் உறுப்பினர் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, “10 நாட்களில் 20 இலட்சம்” வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், பத்து நாட்கள் அல்லாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அரசியல் பயணத்தை பிரபல குழுவுடன் ஆரம்பித்துள்ளார். எனவே, பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கி வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது என்றும், அது மக்கள் பிரதிநிதிகளுடனான ஒப்பந்தம் அல்ல. இந்த ஒப்பந்தத்தில் தமது கட்சி முன்னணியில் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சுமந்திரன் மௌனம் காத்தது ஏன்? வெளியான தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அதாவது காலம் காலமாக பேசப்பட்டு வரும் 13 திருத்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் தற்போதைய பேசுபொருளான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களையும் தனித்தனியாக எடுத்து கலந்துரையாடுவதால் பயனில்லை என சுட்டிக்காட்டிய தமிழ் தலைவர்கள் முக்கியமான இந்த இரண்டு விடயங்களிலும் உள்ள சாதக பாதகம் குறித்து துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பதையும் தெரிவித்தனர். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும்13ம் திருத்தச்சட்டத்தில் உள்ள மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்ததையடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆச்சிரியமடைந்துள்ளார். பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த இருவரும் ஒப்புக்கொண்டனரா என்றும் வியப்புடன் கேட்டுள்ளார். இதன்போது சுமந்திரன் மௌனம் சாதித்ததாக கூறப்படுகிறது. மேலும்,தமது கருத்துக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அறிக்கை ஒன்றையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தார். அதில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இரா.சாணக்கியன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை – இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 4000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யுமாறும்,பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெய்ஷங்கரை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது,இலங்கையின் பல முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளார். அவர் இலங்கைக்கான தனது ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்து நேற்று வியாழக்கிழமை (20.06.24) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள்

024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சுற்றி வளைப்பட்டுள்ளதுடன், 65 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக ஹாலி எல, இரத்தினபுரி, தங்காலை, குருணாகல் மற்றும் கண்டி அலுவலகங்களிலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவை பாராட்டிய ஜெய்ஷங்கர்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து ஜெய்ஷங்கர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் குறித்த பதிவில், முன்னாள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அவரது தொடர்ச்சியான ஆதரவுக்காக எமது பாராட்டுகள் என அவர் தெரவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய (GCE A/L Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் (ஜீன் 20) முதல் நிகழ்நிலையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜீலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) அறிவித்துள்ளார். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது நிகழ்நிலை பரீட்சை இணையத்தளத்தில் நுழைவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.