சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு காத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்…!
17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம், ஆனால் உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டத்தை அறியாமல் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டப்படுவதாகவும், வயது பூர்த்தியாகும் வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் ஆணையாளர் நாயகம் நிஷாத்ன வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ஓட்டுநர் உரிமத்தில் பயிற்சியாளரின் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அதேவேளை, வாகன விபத்துக்களை குறைப்பதற்கு இந்த புதிய முறைமை பயன்படுத்தப்படும் எனவும், இதன்மூலம் பயிற்றுவிப்பாளரை பார்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
24 வருடங்களில் முதன்முறையாக வடகொரியா செல்லும் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக வடகொரியா செல்ல இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்கிறார். வடகொரியா செல்லும் அவர் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை ரஷ்யா உறுதிப்படுத்திய நிலையில், வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் இது தொடர்பில் தகவல் வெளியிடவில்லை. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் கடந்த ஆண்டு ரஷியா சென்றிருந்த நிலையில் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யா வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக பீரங்கிகள், ஏவுகணைகள், மற்ற ராணுவ பொருட்கள் வழங்கி உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நீடிக்க வடகொரிய உதவி செய்து வருவதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இருப்பினும் ஆயுத பரிமாற்றம் நடைபெறவில்லை என வடகொரியா மற்றும் ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை விட மோசமான பாக்டீரியா 48 மணி நேரத்தில் மரணம் இலங்கைக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து…
கொரோனா வைரஸை விட மோசமான ஸ்ட்ரெப்டோகாக்கல் டோக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) என்ற பக்டீரியா அவுஸ்ரேலியா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், இது இலங்கைக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த பக்டீரியா மனித உடலினுள் நுழைந்தால், நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் இறப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜப்பானில் வேகமாகப் பரவிவரும் இந்த பக்டீரியாவால் நேற்று முன்தினம் (16ஆம் திகதி) வரை 977 ஜப்பானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 77 பேர் உயிரிளந்துள்ளதாகவும் ஜப்பானிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி மரணங்கள் 2024 ஜனவரி மற்றும் மார்ச்மாதங்களுக்கிடையில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடதக்கது தசையை கரைக்கும் இந்த கடுமையான பக்டீரியா தற்போது ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது, மேலும் இந்த நோய் அடுத்த ஆறு மாதங்களில் 1,500 பேருக்கு பரவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், அதை தடுக்க அந்நாட்டு சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொண்டை வலி, கைகால் வலி, குறைந்த இரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் வீக்கம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதாலும், இலங்கையில் இருந்து மக்கள் செல்வதாலும் இந்த கொடிய பற்றீரியா இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாற்பது பேரைக் கொல்லக்கூடிய இதுபோன்ற பக்டீரியாக்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் விஜேசிங்க கூறுகையில், இது உலகளாவிய தொற்றுநோயாக மாறவில்லை. எனவே இது தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் ஜப்பானில் இவ்வாறான கொடிய பக்டீரியா பரவியுள்ள போதிலும், உலக சுகாதார ஸ்தாபனம் அது தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிவிப்பையும் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறான பக்டீரியாக்கள் நாட்டிற்குள் நுழைந்தால், தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதாகவும் ,ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த பக்டீரியா தொடர்பில் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு போராட்டத்தில் பதற்றம் ; வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பு – பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘தொழில் உரிமையாகும்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை, போராட்டத்தினை கட்டுபடுத்துவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் அநேகமான இளைஞர்கள் ஈடுபட்டு தங்களின் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்கள். இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை – லோட்டஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்வி சாரா தொழில்சார் சங்கங்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் நாளை(19) ஆம் திகதி யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினரால் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எனவே குறித்த தாக்குதலானது ஊடகத்துறையினை செயற்படாதவாறு அச்சுறுத்தும் தாக்குதலாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பிலே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.என கோரியும் தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்தும் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள், புத்தியீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என, அனைவரையும் பங்கேற்குமாறு வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் குருந்தூர்மலையில் சிவ வழிபாடு!
முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்றையதினம் காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இடம்பெற்றது. தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச வங்கிகளில் 65 ஆயிரம் கோடி கடன் பெற்ற அமைச்சர்கள்!
தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65,000 கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக சாதாரண பிரஜை ஒருவருக்கு வங்கி ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது வரிக்கு மேல் வரி செலுத்தி பொது மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் புதிய வரி வகைகள் இரண்டின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரபல அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபல வர்த்தகர்கள் 10 பேர் 65,000 கோடி ரூபாயை இரு வங்கிகளுக்கு மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்கவிடம் ‘ஒருவன்‘ செய்திப்பிரிவு கேட்டது. அதன்போது அவர் சம்பவத்தை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளார். இரு அரச வங்கிகளிடம் 65,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை மீள செலுத்தாது செயற்படும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேக தடவைகள் கேள்வியெழுப்பியிருந்தாலும் அதற்கு சரியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார். அவர்கள் சுமார் 20 வருடங்களாக இவ்வாறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றை மீள செலுத்தாது வெவ்வேறு வழிமுறைகளில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு அரச வங்கிகளிலும் காணப்படுவது நாட்டின் சாதாரண மக்கள் வைப்பிலிட்ட பணம் என்பதால், அவற்றை இவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்களால் கடனாக பெற்றுக்கொண்டு மாசடிகளில் ஈடுபடுவது வங்கிகளால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலை என இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார். இன்று வரையில் இந்தக் கடன் தொகை மீள செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 42 பேருக்கு மரண தண்டனை – சபையில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில், கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (18) இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலும் 31 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 1969 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையிலும் 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுலில் இல்லை என தெரிவித்தார்.
சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு: இன்று தீர்மானம் எட்டப்படுமா?
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை இன்று (18) பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடுவதற்கான ஏற்பாடுகளை தயார் செய்துள்ளது. சட்டமா அதிபரின் சேவைக்காலம் குறித்த ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இரண்டு தடவைகள் கூடிய போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியவில்லை. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன.
இலங்கையில் விளைந்த அபூர்வ மரவள்ளிக்கிழங்கு: காணக் குவியும் மக்கள்
பிலிமதலாவ (Pilimathalawa) – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று உற்பத்தியாகி உள்ளது 63 வயதான ஓய்வூதியரான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது. அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்துள்ளார். அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அதை எடைபோட்டபோது, 44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது. இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.