யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் நாளை(19) ஆம் திகதி யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினரால் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எனவே குறித்த தாக்குதலானது ஊடகத்துறையினை செயற்படாதவாறு அச்சுறுத்தும் தாக்குதலாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பிலே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.என கோரியும் தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்தும் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள், புத்தியீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என, அனைவரையும் பங்கேற்குமாறு வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.