இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆயத விற்பனையின் ஒப்புதலுக்கு தயாராகும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு (Israel) ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் இறுதித்தறுவாயில் அமெரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது, இது இறுதியாக அங்கீகரிக்கப்பட்டால், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி காசாவில் போர் ஆரம்பித்ததன் பின்னர், இஸ்ரேலுக்கு, அமெரிக்கா வழங்கும் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத விற்பனையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வோசிங்டன் போஸ்ட்டின் அறிக்கையின்படி, அமெரிக்க காங்கிரஸில் உள்ள இரண்டு முக்கிய ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலுக்கு 18 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 50 எப்-15 போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ஆயுத விற்பனையை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தநிலையில், ஜோ பைடன் (Joe Biden ) நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தின் கீழ், பிரதிநிதி கிரிகோரி மீக்ஸ் மற்றும் செனட்டர் பென் கார்டின் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலிய படையினர், ஹமாஸிற்கு எதிராக மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை, 37ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெண்களும் சிறுவர்களுமே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை விட அதிக அணுவாயுதங்களை வைத்திருக்கும் இந்தியா: வெளியான சர்வதேச அறிக்கை
இந்தியா (India), பாகிஸ்தான் (Pakistan), சீனா (China) உட்பட ஒன்பது அணு ஆயுத நாடுகள், அணு ஆயுத நவீனமயமாக்கலையும் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டொக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Stockholm International Peace Research Institute) நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 410 அணு ஆயுதங்களை கொண்டிருந்த சீனா, 2024 ஜனவரியில் அந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், இந்தியா தற்போது 172 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அதேவேளை, பாகிஸ்தான் 170 அணுவாயுதங்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடுகளும் புதிய அணுசக்தி விநியோக அமைப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. மேலும், உலகின் பெரும்பாலான அணு ஆயுதங்களில் 90 வீதமானவை ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இரண்டு நாடுகளும், பல நாடுகளுடன் சேர்ந்து, 2023ஆம் ஆண்டில் புதிய அணுசக்தி திறன் கொண்ட ஆயுத அமைப்புகளை நிறுவியுள்ளன.
ரணில், சஜித் மற்றும் அனுர மூவரும் ஒரே கொள்கையுடையவர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே கொள்கைகளை பின்பற்றி வருவதாக நாடாளுமன்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மூன்று கட்சியின் வேட்பாளர்களும் தனித் தனியாக தேர்தலில் போட்டியிடுவது வளங்களை விரயமாக்கும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மூன்று கட்சிகளின் பெயர்களை ஒன்றிணைத்து ஐக்கிய சமாதான முன்னணி என பெயர் சூட்டி ஒரு வேட்பாளரை நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று கட்சிகளினதும் கொள்கை ஒரே விதமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மூவரும் ஒரே கரட் கிழங்கை மூன்று விதமாக சமைத்து பரிமாற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம் – சித்திரவதை செய்து கொலை மிரட்டல்
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கைபெண் ஒருவர் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளரினால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால், தன்னை விரைவில் இலங்கைக்குஅழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஹொரவ்பொத்தானை – வில்லேவாவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இந்த பெண்ணே இவ்வாறு சித்தரவதைக்கு உள்ளாகழயுள்ளார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார். தனது சேவைக் காலம் முடிவதற்குள் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
காட்டுக்கோழியுடன் சென்ற இருவர் கைது
பேருந்தில் இடித்து உயிரிழந்ததாக கூறி, இறந்த காட்டுப் பறவையை இரகசியமாக எடுத்துச் சென்ற குற்றத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியும் நடத்துனரும், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து தப்போவ வனவிலங்கு சரணாலயத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போதே பறவை, பஸ்ஸில் மீது மோதியதாக தெரிவித்தனர். கருவலகஸ்வெவவைச் சேர்ந்த வனவிலங்குப் பாதுகாவலர்கள், சரணாலயத்தின் ஊடாக வேறொரு பணிக்காக பயணித்தபோது, நடத்துனர் மற்றும் சாரதி பறவையை பஸ்ஸில் ஏற்றிச் செல்வதை அவதானித்துள்ளனர். சாலியபுர சோதனைச் சாவடியில் பேருந்தை சோதனையிட்ட போது, இறந்த பறவையை ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் அவர்கள் மறைத்து வைத்துள்ளனர். ஒரு காட்டுப் பறவையைக் கொன்றதற்காகவும், அப்பறவையின் சடலத்தை ரகசியமாகக் கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்ட அவ்விருவரும், தலா 100,000, ரூபாய் பொலிஸ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் தேசிய பறவை காட்டுக்கோழி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்பரப்பில் சிக்கிய நான்கு தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்..
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பீடி தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!
பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொலிசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பொலிசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிசார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர். பொலிசாரின் விசாரணையில், அருண் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதும், அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதும், இதில் படுகாயமடைந்த மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அருணை கைது செய்த பொலிசார் , அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்க அனுமதிக்க முடியாது!
சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எவ்வித வரியும் அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் வரை 42,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார். நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாது என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
உலகில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் பாரிய பின்னடைவு: வெளியாக காரணம்
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் (Central bank) வெளிநாட்டு நாணய கையிருப்புகளுக்காக அமெரிக்க டொலர்களை மட்டும் பயன்படுத்தாமல் ஏனைய மாற்று நாணயங்களையும் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நடவடிக்கையானது சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் (US dollar) ஆதிக்கத்தில் ஏற்பட்ட சரிவு என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நாணயங்களில், அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியன உள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களாக, யூரோ, யென் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் (Pound) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு இருப்புக்களுக்கான அமெரிக்க டொலரின் பயன்பாடு குறைந்துள்ளது. அத்துடன், புதிய மாற்று நாணயங்களாக அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், சீன யுவான், தென்கொரிய வொன் மற்றும் சிங்கப்பூர் டொலர் மற்றும் சுவீடன், நோர்வே போன்ற நோர்டிக் நாடுகளின் நாணயங்கள், உலகின் மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்த அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பில் பாரம்பரியமற்ற நாணயங்கள் சேர்க்கப்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் தான் மிகவும் சக்திவாய்ந்த நாணயமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.