வவுனியாவில் திடீரென உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக உயிர் பிழைத்த இருவர்!
வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று உடைந்துவீழ்ந்தநிலையில் அதிஸ்டவசமாக இருவர் உயிர் பிழைத்தனர். குறித்த வீட்டில் நேற்று (19.07) மதியம் கணவனும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர். இதன்போது வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்தது. குறிப்பாக வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்தது. அனர்த்தம் இடம்பெற்ற சமயத்தில் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இதேவேளை சிறிநகர்பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றது. தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு பாடசாலை மோசடி விவகாரம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு!
முல்லைத்தீவு விசுவமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை வடமாகாண கல்வி திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளது. ஏற்க்கனவே குறித்த முறைகேடுகள் தொடர்பில் பலமுறைப்பாடுகள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டும் உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னணி சமூக ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளிவந்த நிலையிலும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனையும் வடமாகாண கல்வி திணைக்களமும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந் நிலையில் குறித்த முறைகேடு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை இலஞ்சம் உழல்களுக்கு எதிரான முறைப்பாடு ஆணைக்குழுவுக்கு முறையிட்ட தை தொடர்ந்து வட மாகாண கல்வித் திணைக்களத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை அனுப்புமாறு ஆணைக்குழு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைத்து திருட்டு சம்பவம்!
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று (18.07.2024)அதிகாலை இரு வீடுகள் உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்து பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். திருடர்கள் 1/2 பவுண் தோடு மற்றும் 170,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டாருக்கு காலை எழுந்தபின்னரே திருடப்பட்ட சம்பவம் தெரியவந்ததுள்ளது. முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதற்கமைய சந்தேகத்தின் பேரில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த திருட்டு சம்பவம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..!
நாட்டிலுள்ள பலதரப்பட்ட பகுதிகளிலும் நோயாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமாக சிரத்தை எடுத்து கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு நோயாளரை நாம் வைத்தியரிடம் அழைத்து செல்லும் போது கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியரை நாம் நம்புவது வழக்கம். அவ்வாறான வைத்தியர்கள் நோயாளர்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பதா அல்லது சேவை செய்வதா என்பது அவர்களுடைய மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விடயம். இந்தவகையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் கிருசாந்தி தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.அந்த குற்றச்சாட்டில், “எனது தந்தைக்கு கழுத்துப்பகுதியில் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த போது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். எனினும், அங்குள்ள வைத்தியர்கள் முறையான விதத்தில் எம்மோடு அணுகலில் ஈடுபடாது இழுத்தடிப்பு செய்தனர். இதனால் நாம் கொழும்பு மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில், சுமார் ஆறு மாதங்கள் எனது தந்தைக்கு அங்கு பரிசோதனைகள், கதிர்வீச்சு சிகிச்சை போன்றன அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 45 நாட்கள் எனது தந்தை மகரகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்ட பின்னர் கிளினிக்கிற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு வைத்தியர் கிருசாந்திக்கு மகரகம புற்றுநோய்ப்பிரிவு வைத்தியர் கடிதம் ஒன்று அனுப்பினார். இந்தநிலையில், நாம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு திரும்ப சென்றபோது ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறினர். மேலும் எனது தந்தைக்கு உணவு மாற்றும் குழாய் கூட அதிக காலம் மாற்றுப்படாமல் இருந்த நிலையில் நாம் மீண்டும் தொடர் கண்காணிப்புக்காக மகரகம வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு அரசியல்வாதியோ அல்லது முக்கிய பிரமுகர் ஒருவரோ வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்புக்காக இங்குள்ள வைத்தியரை நாடும் போது, நாம் மட்டும் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றோம்“ எனவும் பாதிக்கப்பட்டவரின் மகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் ; அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை – வைத்தியர் அர்ச்சுனா
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன முற்றுப்புள்ளி வைத்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது. இதன் போது இராமநாதன் அர்ச்சுனா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. தென்மராட்சி மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்றைய திகதியிட்டு இன்றைய தினம் எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது. கொழும்பு சென்று நாளை அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என்றார்.
மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை
2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (17.07.2024) மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் மூவர் தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . அதில் 17 வயது பிரிவில் 59kg எடை பிரிவில் 70kg எடையை தூக்கி சூ.அனுஷா முதலாம் இடத்தையும், 64 kg எடை பிரிவில் 75kg எடையை தூக்கி க.வன்சிகா முதலாம் இடத்தையும், 81kg எடை பிரிவில் 84kg எடையை தூக்கி க.அபிசாளினி இரண்டாம் இடத்தையும், 20வயது பிரிவில் 49kg எடை பிரிவில் 80kg எடையை தூக்கி பி.மேரி அசெம்ரா முதலாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் , மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பளுதூக்கல் போட்டிக்கான மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவன் ஆசிரியர், நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர் செ. அம்பிகா, மற்றும் மாணவர்களுக்கு பொறுப்பாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ந. ரூபராஜா ஆகியோரின் தியாகமும் உழைப்பும் இன்றியமையாததாகும். இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் புதன்கிழமை குழந்தை பிரசவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார். தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இயங்காத கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
வவுனியா வைரவர்புளியங்குளத்தை மையமாக கொண்டு ஒரு காலத்தில் இயங்கிய, 1999ம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்த விளையட்டு கழகம் “ஏசியன் விளையாட்டுக்கழகம்” அப்போதைய காலகட்டத்தில் ரெலோ உறுப்பினராக இருந்த கிறிஸ்ரி குகராஜா அவர்களின் வழிநடத்தலில் இயங்கிய அந்தக்கழகம் வைரவர்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இப்போது உள்ள மிக்சர் விற்பனை செய்யும் கடை கட்டிடத்தில் ரெலோவின் அரசியல் பிரிவு காரியாலயமும் மக்கள் சந்திப்பு காரியாலயமும் இயங்கி வந்தது அத்துடன் ஏசியன் கூல்பார் எனும் விற்பனை நிலையமும் இயங்கி வந்தது இதனை பிரதிபலிக்கும் வகையிலேயே ஏசியன் விளையாட்டுக்கழகமும் அமையப்பெற்றிருந்தது இந்த காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கும் ரெலோ அமைப்பிற்கும் இடையில் கடும் மோதல்கள் இருந்த காலம் புளொட் அமைப்பின் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் நங்கூரம் விளையாட்டுக்கழகமாகவும் ரெலோ மாணவர் ஒன்றியத்தினர் ஏசியன் விளையாட்டுக்கழகமாகவும் பெரும்பாலும் இயங்கி வந்தனர் இதன் போது சன்டிவி ஒளிபரப்பையும் ரெலோ அமைப்பினர் மேற்கொண்டு வந்துடன் அதற்கான ஒரு காரியாலயமாகவும் அந்த ரெலோவின் அரசியல் பிரிவு கட்டிடமே இருந்தது சன்டிவியில் பணியாற்றிய ரகுமான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் கொஞ்ச கொஞ்சமாக ஏசியன் கழகம் உடையத்தொடங்கியது 1999ல் குகண் அவர்களின் இறப்பிற்கு பின்னர் முற்றிலுமாக ஏசியன் கழகம் இயங்காமல் போனது இப்படி இருக்கும் போது வைரவர்புளியங்குளத்தில் உள்ள கிராம அலுவலர் காரியாலயத்தில் 2021ம் ஆண்டில் வைரவர்புளியங்குளம் கிராமத்திற்கு அபவிருத்தி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள் பட்டியலிடப்பட்ட அறிவித்தல் பலகை ஒன்றில் ஏசியன் விளையாட்டுக்கழகத்திற்காக ரூபா 60000 நிதி பெருமதியுடைய விளையாட்டு உபகரணங்கள் வழங்க வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த நிதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியேற உத்தரவிடுமாறு கோரிக்கை!
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு கோரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பிரவேசிப்பதற்கும், அதன் விவகாரங்களில் தலையிடுவதற்கும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, 5 வழக்குகளிலிருந்து அவரை 75,000 ரூபாய் பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் விடுவித்தது. எனினும் அவர் வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, குறித்த விடுதியிலிருந்தும் வெளியேற வேண்டும் என உத்தரவிடக்கோரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றை நாடியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரணவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விடுதிகள் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார். அத்துடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரண வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்துள்ளார். அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும்Dr.அசேல குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.