Search
Close this search box.

கிளிநொச்சியில் பேருந்து மீது மதுப் போத்தலால் தாக்குதல்…!

கிளிநொச்சியில் அரச பேருந்து மீது  மதுபான போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(17)  இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய பேருந்து மீது இவ்வாறு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் பேருந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார். சாரதி பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தியுள்ளார். தனியார் பேருந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம யாழிற்கு விஜயம்…!

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றையதினம்(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறும் மூன்று மாவட்டங்களுக்கான கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் இரு திட்டங்களும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒரு திட்டமும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் 980 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு திட்டம் குறித்தும், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் 170 ஏக்கர் நிலப் பரப்பில் மற்றொரு திட்டம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன. அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  காங்கேசன்துறை கடற்கரைப்  பூங்கா மற்றும் காங்கேசன்துறை விசேட முதலீட்டு வலயம் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு  முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் பொலிஸார் அனுமதிக்கவில்லை என்றும்,  தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை பொலிஸார் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்ஸில் பயணித்தவர்கள் மீது வாள் வெட்டு யாழில் சம்பவம்.

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். இதன்போது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் சாரதி மற்றும் பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகள் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள்  பார்வையிட்டதுடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு முன்னதாக முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு, அதன்  நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில்  கலந்துரையாடினர்.  

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். அவற்றினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.

அரச புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக யாழில் 17 பேர் கைது.

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி – துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இராணுவம் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத மதுபானமான   விற்பனையாளர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.

பேருந்தில் பயணித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் – பூநகரி 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவிக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சாவகச்சேரி பகுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஏறியுள்ளார். இதன்போது பேருந்து பூநகரி பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய ஆசிரியர் பேருந்தின் பின்கதவால் கீழே விழுந்துள்ளார். சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் யுவதி கடத்தலில் சிக்கிய மூவர்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் நின்றவர்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அதற்கிடையில் கடத்தி சென்ற யுவதியை ஊர்காவற்துறை பிறிதொரு பகுதியில் வீதியில் இறக்கி விட்டு, கடத்தி சென்ற நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இருந்த போதிலும் பொலிஸாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து , யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.போதனா இரத்த வங்கி விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக O positive இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் வந்து , இரத்த தானம் வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் கோரியுள்ளனர்.